பக்கம் எண் :


பழநி51

வாடி மனந் தளர்ந்து விக்கலுற்று, அளவின்றி சுக்குபோல் உலர்ந்து, நிலைகலங்கி, அழிகின்ற ஆசை நோயைக் களைந்து, நீரே சேமநிதி என்று நினைந்து, உம்மை அடியேன் புகழ மாட்டேனோ?

விரிவுரை

கனமாயெழுந்து...............மானார்:-

ஆடவர் மனத்தை ஈர்த்து ஆசைக்கு அடிமையாக்குமாறு பருத்தும் உயர்ந்தும் உள்ள தனங்களையுடைய பொதுமாதர். மரணம்-மரணத்தைத் தரும் மந்திரவித்தை.

சிக்கெனவே அணைந்து:-

அருள்நாட்டம் உள்ளவர்கள் இறைவன் திருவடியைச் சிக்கெனப் பிடித்து உய்வார்கள்.

    “சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே”
                                               -திருவாசகம்

இருள் நாட்டமுடைய காமுகர்கள் மாதர்களை அங்ஙனம் சிக்கெனப் பற்றி அழிந்து கெடுவார்கள். அருள் கெடுவதுடன் பொருளுங்கெட்டுப் பரதவிப் பார்கள்.

மனமே தளர்ந்து விக்கலுமேயெழுந்து:-

உடல் தளர்ந்ததோடு உள்ளமும் தளர்ந்து, விக்கலையுற்று சுக்கு போல் உலர்ந்து, அறிவற்று பொறியற்று மெலிந்து நலிந்து கெடுவார்கள். அந்தோ! என்னே பேதைமை! சகல கேடுகளுக்கும் மூலகாரணம் பெண்ணாசை.

பாவமும் பழியும் நல்கும் பல்வகைப் புகழ் அறங்கள்
யாவையும் அழிக்கும் எய்தும் இன்னலும் அதனால் எய்தும்
நோவும் நன்மரபுஞ் செய்யும் நோன்புநல் ஒழுக்க மேன்மை
சாவும் எண்ணுறாமல் நிற்கும் தயங்குபுன் காமம் என்பார்.

வைப்பெனவே நினைந்துனைப் புகழ்வேனா?:-

இறைவன், எய்ப்பினில் வைப்பு. இளைத்தபோது உதவும் சேமநிதி. எடுக்க எடுக்கக் குறையாது உதவும் உலவாக்கிழி. வேண்டுவன எல்லாம் தரும் சிந்தாமணி.