செவிகளிலும் அப்பொருள் நிரம்புமாறு உபதேசித்தருளிய குருநாதா- சற்குருநாதரே! சிவகாம சுந்தரி தன் வரபால-சிவமூர்த்தியை விரும்பியுள்ள அழகில் சிறந்த உமாதேவியாருடைய பெருமை பொருந்திய திருக்குமாரரே! கந்த-கந்தப்பெருமானே! நவநீதமும் திருடி-(கோபிகைகள் வீட்டில பால் தயிர் மட்டுமின்றி்) வெண்ணெயுந் திருடி, உரலோடு ஒன்றும்-(யசோதையினால்) உரலுடன் பிணித்துக் கட்டப்பெற்ற அரி-பாவங்களை யொழிப்பவராகிய கண்ணபிரானாகவும், ரகுராமர்-ரகுகுலத்தில் இராமச்சந்திரராகவும் அவதரித்த நாராயணமூர்த்தி, சிந்தை மகிழ்-திருவுள்ளம் மிகவும் மகிழும்படியான, மருகோனே-மருகராக எழுந்தருளியுள்ளவரே! நவலோகமும் கைதொழு-ஒன்பது கண்டத்தினர்களும் கைகூப்பி வணங்குகின்ற, நிசதேவ-உண்மைத் தெய்வமே! அலங்கிருத-(இரத்தின மணியணி பொன்மாலைகளால்) அலங்கரிக்கப்பட்டவரே! நலமான விஞ்சை கரு-தன்மையைத்தரும் கல்வியின் மூலம், விளைகோவே- விளைகின்ற கலாதிபரே! தெய்வயானை அம் குறமின் மணவாள-தெய்வயானை யம்மையாருக்கும் அழகிய மின்னலைப் போன்ற வள்ளியம்மையாருக்கும் நாயகரே!, சம்ப்ரம்- உறு-சம்பிரமம் பொருந்திய, திறல் வீரம் மிஞ்சு-அளப்பற்ற ஆற்றலும் வீரமும் மிகுந்துள்ள, கதிர்வடிவேலா-ஒளிமிகுந்த வேலாயுதத்தை ஏந்தியவரே! திருஆவினன்குடியில் வருவேள்-திருவாவினன்குடி யென்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள செவ்வேளே! சவுந்தரிக-இணையற்ற கட்டழகுடையவரே! செக மேல் மெய்கண்ட-உலகில் உண்மை ஞானத்தைக் கண்டுரைத்த, விறல் பெருமாளே-வலிமை பொருந்திய பெருந்தகையினரே! நின் செயலே விரும்பி உளம் நினையாமல்-தேவரீருடைய திருவருட் செயல்களையே பெரிதும் விழைந்து அவ்வருள் விளையாடல்களை உள்ளத்தில் நினையாமற் படிக்கு, அவமாயை கொண்டு-பயனில்லாது வைகும் மகாமாயைக்குள் மூழ்கி, உலகில் விருதா அலைந்து உழலும்-உலகின் கண் வீணான காரியங்களில் மிகவும் அலைந்து உழன்று கொண்டிருக்கும். அடியேனை அஞ்சல் என வரவேணும்-அடியேனைப் பயப்படாதே என்று சொல்லி திடமுறச் செய்யும் பொருட்டு தேவரீர் வந்தருளவேண்டும். அறிவு ஆகமும் பெருக-(ஊன சரீரத்தை விட்டு ஞான சரீரத்தைப் பெறவும்) இடரானதும் தொலைய-(பிறப்பதுமாகிய) துன்பமானது அறவே நீங்கவும், அருள் ஞான இன்பமது புரிவாயே-தேவரீருடைய திருவருள் ஞானத்தால் விளையும் அத்துவிதப் பேரின்பத்தைத் தந்து அருள்புரிவீர். பொழிப்புரை (பிரணவ மந்திரப் பொருள் விளக்க உபதேசத்திருவமுதால்) சிவபெருமானுடைய திருவுள்ளமானது குளிரும்படி, உபதேசமுறையாகக் கூறத்தக்க குடிலை மந்திரத்தின் பொருளை, (கரத்தில் ஞான முத்திரையாக |