பக்கம் எண் :


58திருப்புகழ் விரிவுரை

விளக்கியதுமல்லாமல்) அவருடைய இரு செவிகளிலும் உபதேசித்தருளிய ஞானகுருநாதரே! சிவகாம சுந்தர வல்லியம்மையாருடைய சிறந்த திருக்குமாரரே! கந்தமூர்த்தியே! (பால் தயிருடன்) வெண்ணெயையும் களவாடிய, (யசோதையால்) உரலில் கட்டுப்பட்ட கண்ணபிரானும், பாவத்தை நீக்குபவரும், ரகுகுலத்தில் அவதரித்த ஸ்ரீராமசந்திரரும் ஆகிய விட்டுணுதேவர் சிந்தை மகிழ் மருகரே! ஒன்பது கண்டத்தவர்களாலும் வணங்கப்பட்ட மெய்த் தெய்வமே! (மணியணி மலர்களால்) அலங்கரிக்கப்பட்டவரே! நன்மையைத்தரும் கல்வியின் மூலம் விளைவதற்கு நிலைக்களனாய் விளங்கும் தலைவரே! தெய்வயானையம்மை யாருக்கும் குறவர் குடியில் தோன்றிய அழகிய மின்னலை நிகர்த்த வள்ளி யம்மையாருக்கும் மணவாளரே! சம்பிரமம் பொருந்திய வல்லபமும் வீரமுடைய கதிர் வேலாயுதக் கடவுளே! திருஆவினன்குடி யென்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளியுள்ள செவ்வேட் கடவுளே! கட்டழகுடையவரே! உலகில் மெய்ப் பொருளைக் கண்டுரைத்த அறிவாற்றலுடைய பெருமையிற் சிறந்தவரே! தேவரீருடைய திருவருட் செயலை விரும்பி மனத்தில் நினைந்து துதிக்காமற் படிக்கு பயனற்ற மாயையிற் சிக்கி, உலகில் வீணாக அலைந்து (வாணாளைக் கழித்து) சுழன்று திரிகின்ற, அடியேனை ‘அஞ்சேல்!’ என்று கூறி அருளவேண்டும். (ஊன் உடம்பு நீங்கி) ஞான உடம்பைப் பெறவும் (பிறப்பிப்பாகிய) பெருந்துன்பம் நீங்கவும் திருவருள் ஞான இன்பத்தை அடியேனுக்குக் கொடுத்து அருள்புரிவீர்.

விரிவுரை

சிவனார் மனங்குளிர......இரு செவிமீதிலும்.........குருநாதர்:-

சிவபெருமான் தமது குமாரராகிய குகப்பெருமானிடம் உபதேசங் கேட்டுக் கொண்ட வரலாற்றை திருச்செந்தூர் திருப்புகழ் விரிவுரையில் பார்க்க.

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல வொண்ணாதது; ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ்