பக்கம் எண் :


60திருப்புகழ் விரிவுரை

பசுபாச சொந்தங்களாகிய படுமாயையிற் சிக்கி அப்பாழ்த்த படுகுழியில் வீழ்ந்து, உய்யும் நெறியுணராது பன்னெடுங் காலமாக உழன்று கொண்டு வருகின்றோம்.

    “மாலாசை கோபம் ஓயாதெனாளும்
         மாயா விகார வழியே செல்
    மாபாவி காளி”
                    -திருப்புகழ்

நவநீதமும் திருடி:-

கண்ணபிரான்-அருந்தவம் புரிந்து ஆய்ச்சியராக வந்து, தன்னையே நினைந்துருகும் கோபிகைகள் மனை தொறுஞ்சென்று, அவர்களுடைய “அமலமாகிய சிந்தையில்” “உறவுகோல் நட்டு உணர்வு வயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன்னின்ற” அன்பின் முதிர்ச்சியாகிய வெண்ணெயை உண்டார். திருவிளையாடல் காரணமாகவும், மருதமரமாக நின்ற கந்தருவர்களின் சாபத்தைத் தொலைத்தருளும் பொருட்டாகவும், தாயார் அன்பெனும் கயிற்றைக் கொண்டு திடஞானமென்னும் உரலில் கட்டக் கட்டுப்பட்டார்

“இடையார் மனை தோறுநித்த முறிதயிர் நெய்பால் குடிக்க
    இருகையுற வேபிடித்து              உரலோடே
 இறுகிட அசோதை கட்ட அழுதிடு கோபால கிருஷ்ண
    னியல் மருகனே குறத்தி            மணவாளா”

                                -(நடையுடைய) திருப்புகழ்

நவலோகமும் கைதொழு:-

மூவர்க்குந் தேவர்க்கும் யாவர்க்கும் முழுமுதற் கடவுள் முருகப்பெருமானே யாதலால், அப்பரமபதியை நவகண்டங்களில் வாழும் ஆன்மகோடிகள் அனைவரும் கைகூப்பித் தொழுது வழிபடுகிறார்கள்.

    “பதினாலுலகத்தினி லுற்றுறு பக்தர்கள்
     ஏது நினைத்தது மெத்த அளித்தருள் இளையோனே”

                           -(கோமள) திருப்புகழ்

    “சகந்தொழுஞ் சரவணப் பெருமாளே”
                          -(அந்தகன் திருப்புகழ்)