முழுதும் அழகிய பெருமாளாகிய அத்தெய்வமே அழகுக்கு உறைவிடம்; அவரே அழகுக்குப் பிறப்பிடம். ஆயிரகோடி காமர் அழகெலாந் திரண்டொன் றாகி மேயின வெனினுஞ் செவ்வேள் விமலமாஞ் சரணந் தன்னில் தூயநல் லெழிலுக் காற்றா தென்றிடி னினைய தொல்லோன் மாயிருவடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார். -கந்தபுராணம் திருவாவினன்குடி:- பழநிமலையின் அடிவாரத்திலுள்ள கோயில், “திருவாவினன்குடி” யாகும். திரு-இலக்குமி, ஆ-காமதேனு, இனன்-சூரியன், கு-பூமி, டி-அக்கினி, எனவே இந்த ஐவரும் பூசித்த கோயில் என்பர். ஜெகமேல் பெய்கண்ட விறல் பெருமாளே:- சுப்ரமண்ய சாரூபம் பெற்ற அபர சுப்பிரமணியர்களில் ஒருவர், சுப்ரமண்ய பரப்பிரமத்தின் திருவருள் தாங்கி, திருஞானசம்பந்தராகத் தோன்றி, திருமயிலை யிலே எலும்பைப் பெண்ணாக்குங் காலத்து, “உலகிற் பிறந்தார்கள் பெறும் பயன் களாவன. மதிசூடும் மணியிடற்றண்ணலினது அடியாருக்கு அன்னமளித்து உபசரித்தலும் அக்கண்ணுதற் கடவுள் அடியார் பொருட்டு எழுந்தருளியவரும் நல்விழாவை அன்புடன் தெரிசித்தலுமேயாம், பிறவியின் பயன்கள் இவ்விரண்மே என்பது உண்மையேல், நீ உலகாமுன் உயிர்பெற்றெழுக” என்று சொல்லி உண்மையைக் கண்டுரைத்து பெண்ணாகச் செய்த அற்புத அருட் செயலையுங் குறிப்பாக உணர்த்தும். மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும் அண்ணலா ரடியார்தமை யமுது செய்வித்தல் கண்ணினா லவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல் உண்மை யாமெனில் உலகர்முன் வருகென உரைப்பார். -பெரிய புராணம் |