பக்கம் எண் :


64திருப்புகழ் விரிவுரை

ஞானங்களாலும்) சொல்லுகின்ற புகழ்ச்சியையுடைய திருக்குமாரர் என்கின்ற, இளையோனே-என்றும் இளையவரே! கராமலைந்திடு-முதலையானது போர்புரிய, நுதிவைத்த களிறுக்கு-வணக்கத்தை கொண்டு துதித்த கஜேந்திரன் என்ற யானைக்கு, அருளே புரிந்திட-திருவருள் செய்து காத்தற்பொருட்டு, நொடியில் பரிவாக வந்தவன்-நொடிப் பொழுதில் மிகுந்த அன்புடன் வந்தருளிய நாராயணமூர்த்தியின், மருகோனே-மருகரே! அகரப்பெருமாள் ஆதி ஒன்றிடு- அகார உகார மகாராதிகள் அடங்கியதும், முதல் அக்கரம் ஆனதின் பொருள்- எல்லாக் கலைகளுக்கும் எல்லா மந்திரங்களுக்கும் முதலெழுத்துமாகிய பிரணவமந்திரத்தினது பொருளை, அரனுக்கு இனிதா மொழிந்திடு- சிவபெருமானுக்கு இனிமையாக உபதேசித்தருளிய, குருநாதா-குருநாதரே! அமரர்க்கு இறையே வணங்கிய-தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரன் வழிபட்டுப் போற்றிய, பழநி திருவாவினன்குடி அதனில்-பழநி மலையின் அடியில் உள்ள திருவாவினன்குடியில், குடியாய் இருந்து அருள்-என்றும் நீங்காது நிவாசம் புரிந்து அடியார்கட்கு அருள் புரிகின்ற, பெருமானே- பெருமையின் மிக்கவரே! பகர்தற்கு அரிது ஆன-இத்தன்மைத்து என்று சொல்வதற்கு அரியதான செம்தமிழ்-செவ்விய தமிழ் மொழியிலுள்ள, இசையில் சில பாடல்-இனிமையான சில பாடல்களை அன்போடு பயில-மெய்யன்புடன் கற்றுக்கொள்ளும் பொருட்டு, பல காவியங்களை உணராதே-பற்பல தமிழ் காப்பியங்களைத் தெரிந்து, கொள்ளாமல், பவளத்தினை-பவளத்தையும், வீழியின் கனி அதனைப் பொருவாய்-விழுதிக் கனியையும் ஒத்துச் சிவந்திருக்கின்ற வாயையுடைய, மடந்தையர்-பரத்தையருடைய, பசலைத்தனமே பெறும்படி விரகாலே-காமநோயால் உண்டாகும் நிறவேறுபாட்டை யடையத்தக்க விரக வேதனையால், சகரக் கடல் சூழும்-சகர மைந்தர்களால் தோண்டப்பட்ட கடலால் சூழப்பட்ட, அம்புவி மிசை-அழகிய பூமியின் மீது, இப்படியே திரிந்து- இவ்வண்ணமாகவே மோகாடவிக்குள் திரிந்து, உழல் சருகு ஒத்து-கழல் காற்றிலகப்பட்ட சருகைப்போல் சாரமற்று, உளம் அயர்ந்து-மனமானது மிகவும் சோர்ந்து, உடல் மெலியாமுன் அடியேனுடைய உடம்பு மெலிந்து அழியாமுன், தகதித்திமி தாகிணங்கிணி என உற்று எழு-தகதித்திமி தாகிணங்கிண என்ற தாள ஒத்துடன் நடனம் செய்து எழுகின்றதும், தோகை அம் பரிதனில்- தோகையை யுடையதும் அழகியதுமாகிய மயில் வாகனத்தின்மீது, அற்புதம் ஆக வந்து, அருள் புரிவாயே-திருவருள் புரிவீர்.

பொழிப்புரை

“ஞானமயமாகின்ற இத் திருப்பாலமுதத்தை உண்ணுவாய்” என்று உமையம்மையார் சொல்லிப் பொழிந்தருளுகின்ற ஞானப்பாலை அருந்திய, அறிஞர்கள் புகழ்ந்து “திருக்குழந்தையே” என்று கூறுகின்ற என்றும் இளையவரே! முதலையால் போர் தொடங்கப்