முக்கட்பெருமான் தாமும் ஒரு புலவராயிருந்து, தமிழை ஆராய்ந்தார் என்னின்- அதன் பெருமையை என்னென்றியம்புவது? நம்பியாரூரருக்குப் “பித்தா” என்றும், சேக்கிழார் பெருமானுக்கு “உலகெலாம்” என்றும், அருணகிரிநாதருக்கு “முத்தைத்தரு” என்றும் சிவபெருமானும் செவ்வேடப் பெருமானும் செந்தமிழால் அடியெடுத்துத் தந்தனர். என்பைப் பெண்ணாக்கியதும், இறந்தவரை எழுப்பியதும், கற்புணை கொண்டு கரையேற விட்டதும், முதலை வாய்ப்பட்ட மகனை வருவித்ததும், கம்பத்திளையனாராகக் கந்தவேளைக் காட்சி தரச் செய்ததும் இத்தமிழ் பாடலேயன்றோ? தமிழ்ப் பாடலைக் கேட்கும் பொருட்டு கண்ணுதலண்ணல் நால்வர்களிடத்தில் செய்த திருவிளையாடல் ஒன்றா இரண்டா? எண்ணிலாதன. என்னே தமிழின் பெருமை! “முத்தமிழால் வைதாரையுமங்கு வாழ வைப்போன்” எனற் தெய்வத்திருவாக்கு எந்தக் கல்நெஞ்சத்தாரை உருக்காது? இறைவனை எளிதில் வசப்படுத்துவதற்குத் தமிழ்மொழியே தக்கதாம். தமிழ்ப்பாடலைப் பாடினால் மனவாசகங்கடந்த இறைவன் ஆங்கு இனிது இன்பநடம் புரிவன். “எத்திடார்க்கரிய முத்தபாத்தமிழ்கொ டெத்தினார்க் கெளிய பெருமாளே” -(தொக்கறா) திருப்புகழ் என்ற திருப்புகழடியைச் சிந்திப்பார் சித்தத்தில் தேனமுதூறுகின்றது. சகரக்கடல்:- சகரபுத்திரர்கள் அகழ்ந்து உண்டாக்கியதால் கடலுக்கு “சாகரம்” என்ற பெயருண்டாயிற்று. சகரன் அயோத்தியில் தருமசிந்தையுடைய சகரன் என்ற அரசன் இருந்தான். இவன் தாயின் வயிற்றில் கருவிருந்த போது மாற்றாந்தாய்களால் நஞ்சூட்டப்பட்டும் இறவாது ஒளரவரிஷியால் காக்கப்பட்டுப் பிறந்ததால் இப்பெயர் |