பக்கம் எண் :


68திருப்புகழ் விரிவுரை

சிரிப்பதுமாக இருந்தான். இவனால் வருந்திய குடிகள் பரிதவித்தார்கள். அயோத்தியா நகர முழுவதும் இவன் செய்கையைக் கண்டு அலறிற்று, இதைக் கண்ட சகர மகாராஜன் மனங் கொதித்து, அவனைக் காட்டுக்குத் துரத்தி விட்டான். அஸமஞ்சனுக்கு அம்சுமான் என்று ஒரு பிள்ளை பிறந்திருந்தான். அவன் தந்தையைப் போலல்லாமல் சிறந்த நீதிமானாகவும் பலவானாகவும் இருந்தான். எல்லாரும் அவனிடம் அன்பு பாராட்டினார்கள். எல்லாரிடத்திலும் அவன் அன்பு செய்து வந்தான்.

சகரமகாராஜன் அசுவமேத யாகஞ் செய்யத் தொடங்கினான். விந்திய மலைக்கும் இயமமலைக்கும் இடையில் அந்த யாகம் நடந்தது. யாகத்திற்குரிய  அசுவம் உலக வலஞ் செய்ய விடப்பட்டது-அதன்பின் அம்சுமான் வில்லுங் கையுமாக பெரிய தேரேறி அதனைக் காத்தற் பொருட்டுச் சென்றான். அந்த அசுவமேத யாகத்தைக் கெடுக்க எண்ணிய இந்திரன் ஒரு நாள், அசுர உருவம் கொண்டு ஒருவருக்குந் தெரியாமல் யாகத்துக்காக விடப்பட்டட அக்குதிரையைத் திருடிக்கொண்டு போய் விட்டான். குதிரை மறைந்துவிடவே, யாகத்தை நடத்தி வைக்கும் புரோகிதர்கள் சகரனைப் பார்த்து “மன்னரே! குதிரையைத் திருடிக்கொண்டு போனவனைக் கண்டு பிடித்து வதைக்க வேண்டும். குதிரையை மீட்டுக்கொண்டு வரவேண்டும். இல்லையேல் நமக்கெல்லாம் துன்ப முண்டாகும். யாகம் நிற்காமல் நடக்கும் வழியைத் தேடுங்கள்” என்றனர். அதைக் கேட்ட அரசன் தனது அறுபதினாயிரங் குமாரர்களைக் கூப்பிட்டு, “எனது வீரக் குழந்தைகளே! நமது குதிரையை அசுரர் கொண்டு போயிருக்க மாட்டார்கள். மந்திரங்களால் திக்பந்தனம் பண்ணியிருக்கிறோம். அதனை மீறி அசுரர் வரமாட்டார்கள். நமது யாகத்தை எவ்விதத்திலும் நிறுத்தப்படாது. ஆதலால், நீங்கள் பூவுலக முழுவதும் பங்கிட்டுக் கொண்டு தேடுங்கள். பாதாளலோகம் வரை பூமியைத் தோண்டித்தான் ஆகவேண்டுமென்றாலும் அப்படியுஞ் செய்யுங்கள். நான் யாகத்திற்குச் சங்கல்பம் செய்து