கொண்டிருப்பதால், இந்த இடம் விட்டு நீங்கப்படாது. குதிரையைக் காணுமளவும் எனது பேரனுடனும் புரோகிதர்களுடனும் யாகசாலையில் இருக்கின்றேன். உடனே செல்லுங்கள்” என்றான். முயற்சியிற் சிறந்த அவர்கள் காலதூதர்களைப் போல் உலகெங்கும் தேடிக் குதிரையைக் காணாமையால் ஆளுக்கு ஒரு யோசனை தூரமாகப் பங்கிட்டுக் கொண்டு வஜ்ஜிராயுதத்திற் கொப்பான தமது நகங்களாலும் ஆயுதங்களாலும் பூமியை வெட்டினார்கள். உலகெல்லாம் நடுங்கின. பேரிரைச்சலுண்டாயிற்று. பல உயிர்கள் மடிந்தன. நாகர்களிலும் அசுரர்களிலும பலர் இம்சிக்கப்பட்டு அலறினார்கள். இவ்வாறு அவர்கள் அறுபதினாயிரம் யோசனை தூரம் பூமியை அகழ்ந்து பாதாளலோகம் காணும்படி பிளந்து எறிந்தார்கள். அறுபதினாயிரம் சகரகுமாரர்களும் செயற்கரிய இச்செய்கையைச் செய்தார்கள். இதனைக் கண்ட தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், நாகர்கள் முதலிய எல்லாரும் நடுநடுங்கி பிரமதேவரிடம் ஓடி வணங்கி, “வாணிகேள்வ! சகரபுத்திரர்கள் பூமி முழுவதும் பிளந்து எறிகின்றார்கள். எதிர்ப்பட்டவர்களை எல்லாம், இவன் தான் குதிரையைத் திருடியவன்,” “இவன் தான் யாகத்தைக் கெடுத்தவன்” என்று சொல்லுகின்றனர். என்றார்கள். பிரமதேவர் “நீங்கள் பயப்படவேண்டாம். இந்த பூமிதேவி எல்லாம் அறிந்தவரான நாராயணருடைய மனைவி. அவர் கபிலமுனி வடிவங்கொண்டு இந்த பூமி முழுவதையும் எப்பொழுதும் தாங்கி வருகின்றார், அவருடைய கோபாக்கினியினால் அந்த அறுபதினாயிரவரும் எரிந்து விடுவார்கள். அஞ்சாதீர்கள்” என்றார். அமரராதியோர்கள் மகிழ்ந்து தத்தம் இருக்கை யேகினார்கள். சகரகுமாரர்கள பூமியைப் பிளந்து கொண்டு போகும் பொழுது இடிவிழுந்தாற் போன்ற ஒரு பேரொலி கேட்டது. பூமி முழுவதும் தேடிவிட்டதாக எண்ணி தந்தைபால் திரும்பி வந்து “எந்தையே! உலகமுழுவதும் தேடினோம். எதிர்ப்பட்ட தேவர், அசுரர், நாகர், மனிதர் முதலியோரை வதைசெய்தோம். குதிரையாவது |