குதிரையைத் திருடியவனாவது கிடைக்கவில்லை. இனி செயற்பாலது யாது?” என்ன, சகரன் சினந்து, “இன்னும் பூமியைப் பிளவுங்கள். குதிரையின்றித் திரும்பி வர வேண்டா” என்றான். மீண்டும் அவர்கள் குதிரையை விரைந்து தேடினார்கள். பாதாளத்திற்குச் சென்று பார்த்தார்கள். அங்கு அவ்வுலகத்தை தலைமேல் தாங்கிக் கொண்டு பெரிய மலைபோல் நிற்கும் விருபாக்ஷம் என்ற திக்கஜத்தைக் கண்டார்கள். அக்கஜத்தின் அடியில் பல யோஜனை தூரம் தோண்டிப் பார்த்தார்கள். எண்டிசைகளிலும் உள்ள திக்கஜங்களையும் பார்த்து அவற்றின் அடியிலும் பிளந்து கொண்டு போனார்கள். அங்கு ஒருவர் உட்கார்ந்து கொண்டு தவம் புரிய கண்டார்கள். அவர்தாம் கபிலமுனிவர் வடிவங்கொண்ட நாராயணர். குதிரையைக் காணும் பேரவாவுடனிருந்த அவர்கள், இத்தனை நாள் தேடியகப்படாத குதிரை அங்கு மேய்ந்து கொண்டிருக்கக் கண்டார்கள். மட்டற்ற மகிழ்ச்சி யடைந்தார்கள். “இவன்தான் நமது குதிரையைக் கவர்ந்த கள்வன்” என்று மிகுந்த கோபங்கொண்டு, மரங்களையும் மண்ணையும், படைகளையும் வீசி, “துஷ்டா! நில்” என்று சொல்லிக்கொண்டு அடிக்க ஓடிவந்தார்கள். அம்முனிவர் இவர்கள் செய்த ஆரவாரத்தைக் கேட்டு கண் திறந்து பாாத்துச் சினத்துடன் “ஹும்” என்று ஊங்காரஞ் செய்தார். உடனே அந்தச் சகரன் மக்கள் எல்லாரும் எரிந்து சாம்பற் குவியலாகி விட்டார்கள். பிறகு சகரன் தனது பேரனாகிய அம்சுமானால் அக்குதிரையைக் கொண்டு வரச்செய்து யாகத்தை முடித்தான். பிறது அம்சுமானுடைய பேரன் பகீரதன் கங்கையைக் கொணர்ந்து சகரபுத்திரர்களுடைய எலும்பின் மேல் படவைத்ததும் அவர்கள் நற்கதியுற்றார்கள். இதன் விரிவை நூல்கள் வாயில் கண்டு தெளிக. சருகொத்துளமே யயர்ந்துடல் மெலியாமுன்:- “சுழல்காற்றில் அகப்பட்ட சருகுபோல் இங்குமங்கும் அலைந்து கெட்டேன்” என்ற பிரயோகத்தில் “சருகு எப்படி சாரமற்று உலர்ந்து விட்டதோ அதுபோல் அடியேனும் பயனற்றுக் கிடக்கின்றேன்” என்ற குறிப்புங் காணத்தக்கது. |