உமைமொழியிற் பொழி பாலை யுண்டிடு.........இளையோனே:- முருகப் பெருமான் ஞானாம்பிகையாரது திருமுலைப் பாலாகிய சிவஞானத் திருவமுதையுண்டு ஞானபண்டிதன் என்று நம்பினோர் அனைவருக்கும் ஞானத்தை யருளிச் செய்கின்றனர். “ஞானாகரன்” “ஞானாங்குமரன்” என்ற திருவாக்கை யுன்னுக. அறுமுகனார் அம்மை முலைப்பாலை விரும்பிச் செய்த திருச்செயலை அடியிற் கண்ட அரும்பாடலில் கண்டு மகிழ்க. எள்ளத் தனைவருந் துறுபசிக்கும் இரங்கிப் பரந்து சிறுபண்டி எக்கிக் குழைந்து மணித்துவர்வா யிதழைக்குவித்து விரித்தெழுது துள்ளித் துடித்துப் புடைபெயர்ந்து தொட்டி லுதைத்துப் பெருவிரலைச் சுவைத்துக் கடைவாய் நீரொழுத் தோளின் மகரக்குழைதவழ மெள்ளத் தவழ்ந்து குறுமூரல் விளைத்து மடியின் மீதிருந்து விம்மிப் பொருமி முகம்பார்த்து வேண்டு முமையாள் களபமுலை வள்ளத் தமுதுண் டதமகிழ்ந்த மழலைச் சிறுவா வருகவே வளருங் களபக் குரும்பைமுலை வள்ளி கணவா வருகவே. -திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் நுதிவைத்தகரா மலைந்திடு களிறு.......வந்தவன்........ கஜேந்திரனுக்கு அருள்செய்த வரலாற்றைத் திருப்புகழ் விரிவுரை இரண்டாம் தொகுதியில் காண்க. கருத்துரை உமாதேவியின் திருக்குமாரரே! திருமால் மருகரே! பரசிவ குருவே! பழநி யாண்டவரே! அரிய செந்தமிழ்க் காவியங்களை யுணராமல், மாதர் வலைப்பட்டு வீணே அழிந்து அடியேன் மெலிவடையாமுன், மயில் வாகனத்தின் மீது வந்து காத்தருள்வீர். வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள் வந்தவர் தங்களை வாதை கண்டவர் வங்கண முந்தெரி யாம லன்புகள் பலபேசி |