குன்று என வந்து அருள்-மலையென்று புகழுமாறு ஓங்கியுயர்ந்த, நீபம் உந்திய-கடப்பமாலையை மிகுதியாகத் தரித்துள்ள, மணிமார்பா-இரத்தின மணிகளுடன் கூடிய திருமார்பை யுடையவரே! கொந்து அவிழும் தடமே நிரம்பிய-பூங்கொத்துகள் மலர்கின்ற நீர் அலைகள் நிரம்பியதும், பண்புதரும்- பண்பாட்டினைத் தருகின்றதும் ஆகிய, திருவாவினன்குடி-திருவாவினன்குடி என்ற திருத்தலத்தினும், குன்றுகள் எங்கணுமே வளர்ந்து அருள்-ஏனைய மலைகள் எல்லாவற்றிலும் எழுந்தருளியுள்ள, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! வஞ்சனை மிஞ்சிய-வஞ்சனைகள் மிகுந்த, மாய வம்பிகள்-மாய வம்புகள் புரிவோர்; வந்தவர் தங்களை வாதை கண்டவர்-தம்பால் வந்தவர்களைத் துன்பம் புரிவோர்; வங்கணமும் அன்புகள் பல பேசி- உண்மையான காதல் இல்லாமல் அன்புமொழிகள் பல விதமாகப் பேசி, மஞ்சம் இருந்து-கட்டிலின்மீது அமர்ந்து, அனுராக விந்தைகள் தந்த கடம்பிகள்-கலவி வேடிக்கைகள் தந்த பொல்லாதவர்கள், ஊறல் உண்டிடு மண்டைகள்-இதழ் ஊறலையுண்ணுகின்ற வேசையர்; கண்டிதமாய் மொழிந்திடும் உரையாடல்- கண்டிப்புடன் பேசுகின்ற வார்த்தைகளினால், சஞ்சலமும் தரு மோக லண்டிகள்-மனக் கவலைகள் தருகின்ற மோக தூர்த்தைகள்; இன்சொல் புரிந்து உருகாத தொண்டிகள்-இனிய வசனங்களை வெளியிற் பேசி உள்ளத்தில் உருக்கம் இல்லாத வேலைக்காரிகள், (இத்தகைய பொதுமகளிரின்) சங்கமம் என்பதையே புரிந்தவன் அயராதே-கூட்டுறவையே விரும்பினவனாய் அதில் அயர்ச்சியின்றி, தங்களில் நெஞ்சக மேமகிழ்ந்து-அவர்களிடத்திலேயே உள்ளம் உவக்கின்றவனாய், அவர் கொஞ்சி-அம்மகளிர் கொஞ்சியும், நடம்பயில வேசை முண்டைகள் தந்த-நடனம் புரிந்திடும் வேசை முண்டைகளான அவர்கள் தந்த, சுகம் தனையே உகந்து-சுகத்தையே விரும்பி, உடல் மெலிவேனோ-உடல் மெலிந்து போவேனோ? பொழிப்புரை கம்சனால் ஏவப்பட்ட சகடாசுரனைக் கொன்றவரும், (கோபிகைகளின் ஆடைகளைக் கவர்ந்து) குருந்த மரத்தின் மீது ஏறியவரும், (உருக்குமணி முதலிய) மாதர்களின் கண்கள் சிவக்குமாறு புணர்ந்தவரும், உலகில் தரும முறை நிலைபெறும்படி செய்து அதனைக் கண்டு மகிழ்ந்தவரும், அழகாக இருந்து வேணுகானம் புரிந்து அந்நாளில் அன்பு செய்து கண்கள் குளிர்ந்தவருமாகிய கண்ணபிரான் மகிழ்ச்சி கொள்கின்ற திருமருகரே! தெய்வயானை யம்மையும் வள்ளியம்மையும் இன்புறுமாறு தழுவி யருளிய, மலைபோல் உயர்ந்து கடப்ப மாலை தரித்ததும் ஆகிய இரத்தின மணி மாலையுடன் கூடிய திருமார்பை யுடையவரே! |