பக்கம் எண் :


8திருப்புகழ் விரிவுரை

பெருமானுக்கு பஞ்சாக்கர வடிவமும் உளது என்பதனை:

    ஆடும்படி கேள்நல் லம்பலத்தா னையனே
    நாடுந் திருவடியி லேநகரம்-கூடும்
    மகர முதரம் வளர்தோள் கிகரம்
    பகருமுகம் வாமுடியப் பார்.

என்னும் உண்மை விளக்கத் திருவிருத்தத்தா லுணர்க.

ஞானபண்டித ஸ்வாமி:-

முருகப் பெருமான் ஞானமூர்த்தி என்பதும், ஞான தாதா என்பதும், ஞானாசாரியன் என்பதும், ஞான சொரூபன் என்பதும் அடியிற்கண்ட பிரமாணங்களால் அறிக.

    “குருக டாக்ஷக லாவே தாகம
     பரம வாக்கிய ஞானா சாரிய
     குறைவு தீர்த்தருள் ஸ்வாமி”

                    -(பொருளின் மேற்) திருப்புகழ்

    “ஞானந்தா னுருவாகிய நாயக னியல்பை
     யானு நீயுமா யிசைத்து மென்றாலஃ தெளிதோ”

                                  -கந்தபுராணம்

வெகு கோடி நாம சம்பு:-

ஒரு நாமமுமில்லாத அப் பரமபதி, ஆன்மாக்களின் பொருட்டு பல ஆயிரந் திருநாமங்களைத் தாங்கியருள் புரிகின்றனர்.

    “ஒரு நாம மோருருவ மொன்று மிலார்க் காயிரமாந்
    திருநாமம் படிநாந் தெள்ளேணங் கொட்டாமோ”

                                    -திருவாசகம்

    “பேராயிரம் பரவி வானோ ரேத்தும்
    பெம்மானை”
                        -அப்பர்

கிரிராஜ:-

முருகக் கடவுள் குறிஞ்சி நிலக் கடவுளாதலால் மலைக்கு நாயகன் என்றார். “மலைக்கு நாயக” என்று திருக்கோண மலைத் திருப்புகழிலும் கூறியுள்ளார்.