பக்கம் எண் :


10 திருவேரகம் (சுவாமிமலை)

இடம் இதுதான் என்று தளர்ச்சியடையாமல் அந்த உலோபியரை இசைப்பாட்டாலும் உரைநடையாலும் புகழ்ந்தபோது, மெல்ல நழுவுகின்ற அந்த உலோபர்களின் வீடுகளில் இரவு பகலாகச் சென்று வாட்டமடைந்து உழலுவேனோ? (உழலக்கூடாது என்பது பொருள்.)

விரிவுரை

தமிழ்ப் புலவர்கள் பரம லோபிகளை நாடி ஆங்காங்கு சென்று உழல்வதைக் குறித்து அடிகளார் இப்பாடலில் கூறுகின்றார்.

கதிரவன் எழுந்துலாவு திசையளவு கண்டு :-

சூரியன் கிழக்கே உதித்து மேற்கே செல்லும் திசைகளின் முடிவு வரை செல்வரை நாடியலைவர்.

“வெகுவாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல
   திக்கோடு திக்குவரை மட்டோடி மிக்க பொருள்தேடி”
                                          -(இத்தாரணி) திருப்புகழ்.

மோது கடலளவு கண்டு :-

தரையில் சென்றதுடன் அமையாமல், திரைகடலிலும் சென்று திரிவர்.

கணபண புயங்கராஜன் முடியளவு கண்டு :-

கணம்-கூட்டம். பணம்-பணாமுடி. ஆதிசேடனுடைய ஆயிரம் பணாமகுடங்கள், பூமி தேய்ந்து ஆதிசேடன் முடி தெரியுமாறு நடந்து திரிவர்.

                       “அடிகள் முடியே தெரிந்து
 வரினும் இவர்வீத மெங்க                     ளிடமாக
 வருவதுவொ போதுமென்று ஒருபணமுதா சினஞ்சொல்
 மடையரிடமே நடந்து                    மனம் வேறாய்”
                                       -(தருவரிவ) திருப்புகழ்.

இதமிதமிதென்று :-

இதம் இதம் இது என்று; இது நல்ல இடம் இது நல்ல இடம் என்று எண்ணித் திரிவர்.