அருகருகிருந்து கூடுமிடமிடமிதென்று சோர்வு படையாதே :- தனவந்தருடைய அருகில் சென்று நல்ல இடம் நல்ல இடம் என்று நினைத்து நடந்து நடந்து தளர்ச்சியுறுவார்கள். இசையொடு புகழ்ந்தபோது நழுவிய ப்ரசண்டர் :- இசையுடன் பாடினாலும், அவ்வுலோபியர் மெல்ல நழுவிச் சென்று மறைவார்கள். வாசல் இரவுபகல் சென்று வாடி உழல்வேனோ?:- தானதருமம் கனவிலுமறியாத வஞ்சக லோபியருடைய வீடுகள் தோறும் இரவு பகலாகச் சென்று சென்று அலைவது கூடாது. அடவொடுலகங்கள் யாவும் உதவி நிலைகண்ட பாவை :- அகில வுலகங்களை யீன்று காத்தருள்பவர் உமாதேவியார். “அகிலதலம் பெறும் பூவை சக்தி யம்பை” -(தமரகுரங்களும்) திருப்புகழ். “பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே” -அபிராமி அந்தாதி “உதர கமலத்தினிடை முதிய புவனத்ரயமும் உகுமுடிவில் வைக்கும் உமையாள்” -திருவகுப்பு கருத்துரை சுவாமிமலை மேவும் உமை மைந்தரே! எம்மை உலோபிகளிடம் உழலாமல் காத்தருள். இருவினை புனைந்துஞான விழிமுனை திறந்துநோயி னிருவினை யிடைந்து போக மலமூட இருளற விளங்கியாறு முகமொடு கலந்து பேத மிலையென இரண்டு பேரு மழகான பரிமள சுகந்தவீத மயமென மகிழ்ந்துதேவர் பணியவிண் மடந்தை பாத மலர்தூவப் |