பரிவுகொ டனந்தகோடி முனிவர்கள் புகழ்ந்துபாட பருமயி லுடன்குலாவி வரவேணும் அரியய னறிந்திடாத அடியிணை சிவந்தபாதம் அடியென விளங்கியாடு நடராஜன் அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெணாகம் அயலணி சிவன்புராரி யருள்சேயே மருவலர்கள் திண்பணார முடியுடல் நடுங்க ஆவி மறலியுண வென்ற வேலை யுடையோனே வளைகுல மலங்குகாவி ரியின்வடபுறஞ்சுவாமி மலைமிசை விளங்குதேவர் பெருமாளே. பதவுரை அரி அயன் அறிந்திடாத-நாராயணரும் நான்முகரும் தேடித் தேடிக் காண முடியாமற் போன, அடியிணை-இரண்டு திருவடிகளையுடையவரும், சிவந்த பாதம் அடி என-செந்நிறம் பொருந்திய தமது தூக்கிய திருவடியே உலகங்களுக்கெல்லாம் முதன்மையானதென்று விளக்கி, விளங்கி ஆடும்- பேரருட்பெருஞ்சோதி வடிவாக விளங்கி ஆநந்தத் தாண்டவம் புரிந்தருளும், நடராஜன்-அம்பலக் கூத்தரும், அழல் உறும் இரும்பின் மேனி-நெருப்பில் இடப்பட்டுச் சிவந்தொளிரும் இரும்பைப்போன்ற தமது பொன்மேனியைக் கண்டு, மகிழ்-உள்ளம் உவக்கின்ற, மரகதம் பெண்-மரகதம் போன்ற பச்சை மேனியை யுடைய உமையம்மையாருடைய, ஆகம் அயல் அணி- திருமேனியை பக்கத்தில் இருத்திக் கொண்டவரும், சிவன்- மங்கலத்தையருள்பவரும், புராரி-திரிபுரத்தையெரித்தவரும் ஆகிய பரமேசுவரர்! அருள்சேயே-பேரருட்பெருக்கால் பெற்றருளிய திருக்குமாரரே! மருவலர்கள்-பகைவர்களாகிய அசுரர்களுடைய, திண்பண் ஆரமுடி உடல் நடுங்க-வலி பெற்று அலங்காரமாகவுடைய நவரத்தின மாலைகளுடன் கூடிய தலைகளும் உடல்களும் பயத்தினால் நடுநடுங்கவும், ஆவி மறலி உண- அவர்களுடைய உயிரைக் கூற்றுவன் குடிக்கவும், வென்ற-வெற்றி பெற்ற, வேலை-வேற்படையை உடையோனே கரத்திலே தாங்கியிருப்பவரே! வளைகுலம்-சங்குகளின் கூட்டம், அலங்கு-ஒளி வீசுகின்ற, காவிரியின் வடபுறம்-காவிரியாற்றின் வடதிசையில் விளங்குகின்ற, சுவாமி மலைமிசை விளங்கு-சுவாமிமலையென்கின்ற திருவேரகத்தில் அடியார் பொருட்டு எழுந்தருளியுள்ள, தேவர்பெருமாளே-தேவர்களுக்கெல்லாம் தலைவராகிய பெருமிதமுடையவரே! இருவினை புனைந்து-பெரிய செயலாகிய சிவயோகத்தை மேற்கொண்டு, ஞானவிழி திறந்து-அறிவுக் கண்ணாகும் நெற்றியிலுள்ள நந்திச் சுழி திறக்கப் பெற்று, நோயின் இருவினை இடைந்து போக-(அவ்வறிவுக் கண் திறக்கப்பெற்றதனால்) பிறவிப் பிணிக்குக் காரணமாயுள்ள நல்வினை தீவினையென்ற இருவினைகளும் என்னை விட்டுப் பின்வாங்கி |