ஓடிப்போகவும், மலம் மூட இருள் அறவிளங்கி-அறியாமைக்குக் காரணமாயுள்ள ஆணவ மலமாகிய இருள் மலம் தேய்ந்து போகவும் அதனால் மெஞ்ஞான ஒளி வீச விளக்கமுற்று, ஆறு முகமொடு கலந்து- தேவரீருடைய ஆறு திருமுகங்களின் திருவருட் பெருக்கில் கலப்புற்று, இரண்டு பேரும் பேதம் இலை என-பரமான்மாவாகிய தேவரீரும், ஜீவான்மாவாகிய அடியேனும் இரண்டெனுந் தன்மை நீங்கிக் கலந்து அத்துவிதமாகி, அழகு ஆன-அழகிய, பரிமள சுகந்த வீத மயம் என மகிழ்ந்து-நல்ல வாசனையுடைய மலரும் அதில் வீசும் மணமும் போல் ஒன்றி பேரின்பமுற்று, தேவர் பணிய-தேவர்கள் வணங்கவும், விண் மடந்தை-ஆகாய வாணி, பாதம் மலர் தூவ-திருவடிகளின்மேல் கற்பக மலரைச் சொரியவும், பரிவுகொடு-மிக்க அன்பு கொண்டு, அநந்த கோடி முனிவர்கள்-எண்ணிறந்த பல் கோடி முனி புங்கவர்கள், புகழ்ந்து பாட- புகழ்ந்து பாடவும், பருமயில் உடன் குலாவி வர வேணும்-பெரியமயில் வாகனத்தின் மீது ஊர்ந்து உல்லாசமாக உலாவி வரவேணும். பொழிப்புரை திருமாலும் திசைமுகனும் தேடித்தேடி யறிதற்கரிதான இரண்டு திருவடிகளை யுடையவரும், தமது தூக்கிய செம்மலர் நோன்றாட் கமலமே உலகங்களுக்கெல்லாம் முதன்மையானதென்று விளக்கி அருட்பெருஞ் ஜோதியாக ஆநந்தத் தாண்டவம் புரிந்தருளும் நடராஜப் பெருமானும், நெருப்பிலிட்டு மிக மிக ஒளிரும் இரும்பைப் போன்ற செம்மேனியைக் கண்டு மகிழ்கின்ற, மரகத மேனியையுடைய மலைமகளை அருகில் இருத்திக் கொண்டிருப்பவரும் மங்கலத்தை யருள்பவரும், திரிபுரதகனரும் ஆகிய சிவபெருமான் உலகங்கள் உய்யும் பொருட்டுப் பெற்றருளிய திருப்புதல்வரே! பகைவர்களாகிய அசுரர்களுடைய வலி பெற்று அலங்காரமாகவுடைய மணிமாலைகளுடன் கூடிய தலை உடல் இவைகள் அச்சத்தினால் நடுங்கவும், அவர்களுடைய உயிரை இயமன் உண்ணவும் வெற்றி பெற வேலாயுதத்தைப் படைக்கலமாக உடையவரே! சங்குகளின் கூட்டம் உருண்டு ஒளி செய்கின்ற காவிரி நதியின் வடபுறத்தில் விளங்குகின்ற சுவாமி மலையென்னுந் திருவேரகத் திருப்பதியில் எழுந்தருளியுள்ள தேவர் தலைவரே! அடியேன் பெரிய செயலாகிய சிவயோகத்தை மேற்கொண்டு அறிவுக் கண்ணாகும் |