பக்கம் எண் :


14 திருவேரகம் (சுவாமிமலை)

புருவ மத்தியிலுள்ள நந்திச் சுழி திறக்கப் பெற்று, அதனால் பிறவிப் பிணிக்குக் காரணமாயுள்ள நல்வினை தீவினையென்னும் இரு வினைகளும் பயந்து பின் வாங்கியோடிப் போகவும், அறியாமைக்குக் காரணமாயுள்ள ஆணவமென்னும் இருள் மலம் தேய்ந்தழியவும், அதனால் ஞானவொளி வீசப்பெற்று விளக்கமுற்று, தேவரீருடைய ஆறுதிருமுகங்களின் கருணைப் பிரவாகத்தில் கலந்து, பரமான்மாவாகிய தேவரீரும், ஜீவான்மாவாகிய அடியேனும், நல்ல மணம் வீசும் மலரும் அதன் மணமும்போல் இரண்டற்று அத்துவிதமாகக் கலந்து, தேவர்கள் வந்து வணங்கவும். விண்மாது திருவடிமேல் கற்பக மலர்மாரி பொழியவும், எண்ணிறந்த பலகோடி முனிவர் குழாங்கள் மிக்க அன்பு கொண்டு புகழ்ந்து பாடவும், பெரிய மயிற்பரியின் மீது ஆரோகணித்து உல்லாசமாக உலாவி வரவேணும்.

விரிவுரை

இருவினை:-

இரு-பெரிய; வினை-செயல்; பெரிய செயலாவது சிவயோகம்,

“செனித்த காரி யோபாதி யொளித்து ஞான ஆசார
   சிரத்தை யாகி யான்வேறெ                னுடல்வேறு
   செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம னோதீத
   சிவச்சொ ரூப மாயோகி                என ஆள்வாய்”
                                     
(அனித்தமான) திருப்புகழ்

இது பல பிறவிகளில் சரியை கிரியைகளைச் செய்து அதன் முதிர்ச்சியினால் வருவது; ஆதலினால் பெரிய செயல் என்றனர்.

ஞானவிழிமுனை திறந்து:-

நமக்கு மூடப் பெற்றிருக்கின்ற ஞானவிழி சிவயோகிகட்குத் திறந்திருக்கும். எல்லாவற்றையும், எல்லாக் காலத்தையும், எல்லாப் பொருள்களையும் அறிகின்ற தடைபடாத ஞானம் உண்டாகும்.