கொடிவாரண மெச்ச அளித்த:- வாரணம்-கோழி. முருகவேள் தன் கொடியாகத் தேர்மேலிருந்த சேவலுக்கு சூரபன்மனுடையக் குடலை உணவாகத் தந்தார். சூரபன்மனைப் பிளந்த பின் ஒரு பாதி சேவலாகவும், மற்றொரு பாதி மயிலாகவும் வந்தான். எனவே முன் சேவல் கொடி ஏது? என்ற ஐயம் எழக்கூடும். சூரனை வதைக்கும் முன்னரேயே அக்கினிதேவன் சேவல் கொடியாக நின்று கூவி வெற்றியை விளம்பினான். ஆகவே சூரனுடைய குடலை அவனுக்குத் தந்தவுடன் கொடியாக நின்ற அக்கினிதேவன் அதனையுண்டு மகிழ்ச்சியுற்றான். ஏவலோடும் எரிதழற் பண்ணவன் வாவு குக்குட மாண்கொடியாகியே தேவ தேவன் திருநெடுந் தேர்மிசை மேவி யார்த்தனன் அண்டம் வெடிபட -கந்தபுராணம் பக்தர்கள் ஏது நினைத்தது மெத்த அளித்தருள்:- முருகவேள் அடியவர்கள் நினைத்த பொருள் அத்தனையும் நினைத்த வண்ணம் வழங்கியருள் புரிகின்றார். “அடியவர் இச்சையில் எவையெவை யுற்றன அவை தருவித்தருள் பெருமாளே” -(கலகலெனச்) திருப்புகழ் இராஜத லட்சண லட்சுமி:- இராஜதம் என்ற குணத்துக்கு எட்டு அங்கங்கள் உண்டு. ஊக்கம், ஞானம், வீரம், தவம், தருமம், தானம், கல்வி, கேள்வி, என்பன. இந்த எட்டும் அமைந்த தேவி உமாமகேசுவரி. கருத்துரை திருவேரகத் துறையும் திருவேல் இறைவா! பொது மகளிரின் நட்பு அற அருள்புரிவாய். |