பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 147

கழல் சூத்திரர்-மன்மதன் மகிழுமாறு படுக்கையில் புரளும் வஞ்சகர்கள், சந்தம் ஆமோ-நட்பு ஆகுமோ? (ஆகாது).

பொழிப்புரை

சூராதி யவுணர்கள் பதைக்கவும், ஆதிசேடன் அஞ்சி நெளியவும், பெரிய சமுத்திரம் ஒலிக்கவும், மாமிசக் குடலைக் கழுகுகள் சூழவும், நரி, கருடன், காக்கை முதலியன பலப் பல கூட்டமாய் நெருங்கவும், வஞ்சனை மேற்கொண்ட கிரவுஞ்ச மலையின் வலிமையை அழித்து, எண்திசையிலுள்ள மலைகளையும், யானைகளையும் நடுங்க வைத்து, அவைகளின் அகங்காரம் மிக்க அறிவு குலையும்படி நகைத்து, வேலை விடுத்தருளியவரே! அழகிய சிறந்த கூந்தலையுடையவரும், விண்ணுலகிலுள்ள இந்திராணி வளர்த்த பேரழகியுமாகிய தேவயானையைக் கலந்த சித்த மூர்த்தியே, ஒப்பற்ற அற்புதமான அமுத வடிவாய் விளங்கும் வள்ளிப் பிராட்டியை மணந்தவரே! திருவேரக மலை என்னும் அற்புதம் மிகுந்த சுவாமிமலையின்கண் நின்றருளும் அழகரே! ராஜத லட்சணம் பொருந்திய உமாதேவியார் பெற்ற தலைவரே! நீண்ட கூந்தலைச் செருகி, அக்கூந்தலைப் பெரிய ஒளியுடைய குழை தரித்துள்ள காதுடன் அசையுமாறு விட்டும், ஒளி விடும் பற்கள், பவழம் போன்ற இதழ் அழகு செய்ய, குமிழ மலர் போன்ற மூக்கு, நீண்ட கமுகு போன்ற கழுத்து, நல்ல மூங்கில் போன்ற தோள், பொன்மலை இளநீர் தேவரமுதம் கொண்ட குடம்போல் உள்ள தனம்,  தேமல் உள்ள மார்பு, முத்துமாலை இவைகளுடன் விளங்கும் ரம்பைபோன்ற விலைமகளிர், மேகத்தில் தோன்றும் மின்னல் போன்ற இடையும், வாழைப் போன்ற தொடையும், அல்குலாகியத் தேன் பொதிந்த இடமும் உள்ளிருக்க கால்வரை மறையுமாறு பொங்கி நெருங்கும் அழகியப் புடவை நன்கு விளங்க, கரிய குயில்போல் பேசி, தெருவில் உடம்பை நெளித்து நின்று நகைத்து நடிக்கும் அம் மாதர், மன்மதனும் மகிழுமாறு படுக்கையில் புரளும் வஞ்சகர்கள்; அவர்களின் நட்பு ஆகுமோ? (ஆகாது.)