இருவினை இடைந்து போக:- பிறவிக்குக் காரணமாயுள்ளது நல்வினை தீவினையாகிய இரண்டேயாம். அது சமமுற்றபோது இறைவன் திருவருட் காட்சியுண்டாகும். “உணங்கி லாததோர் வித்து மேல் விளையாம லென்வினை ஒத்தபின் கணக்கில்லாத்திருக்கோல நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே” -மணிவாசகர் “இருவினை யின்பத்துன்பத் திவ்வுயிர் பிறந்திருந்து வருவது போவதாகும்” -சித்தியார் மலமூட இருள்:- ஆணவ இருள் பூத இருளினும் மிக்க வலியுடைத்து, எல்லாப் பொருளையும் மறைக்கும் பூத இருள், தன்னைக் காட்டி நிற்கும். ஆணவ இருள், தன்னையுங் காட்டாது தான் மறைந்த ஆன்மாவையுங் காட்டாது. பிறபொருளையுங் காட்டாது. “ஒரு பொருளுங் காட்ட திருளுருவம் காட்டும் இருபொருளுங் காட்டா திது” -திருவருட்பயன் ஆறுமுகமொடு கலந்து பேதமிலையென:- சீவன் இருவினையொப்பு கைவரப் பெற்று மலநிவர்த்தி யானவுடன் சக்தி பதிந்து சிவத்துடன் இரண்டறக் கலந்து பூரண இன்பத்தைத் துய்க்கின்றது. “ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவிலாமல் ஓமங்கி யுருவ மாகி யிருவோரும் ஓரந்த மருவி ஞான மாவுஞ்சைச முதுகினேறி லோகங்கள் வலம தாட அருள்தாராய்” -(ஞானங்கொள்) திருப்புகழ் அங்ஙனம் அத்துவிதமுற்று தேவர் பணியவும் விண்மடந்தை தண்மலர் தூவவும், முனிவர்கள் புகழ்ந்து பாடவும், மயில் வாகனத்தின் மீது இன்பமாக லோகமெல்லாம் உலாவி வரவேண்டும் என்று வேண்டுகிறார். |