பக்கம் எண் :


150 திருவேரகம் (சுவாமிமலை)

பொழிப்புரை

சிவபெருமானுக்கும் குருமூர்த்தியாக விளங்கி உபதேசித்த குகப் பெருமானே! வள்ளி நாயகியின் கணவரே! குளிர்ந்த சோலைகளும் வளர்ந்த பாக்கு மரங்களும் சூழ்ந்த-மேற்றிசையிலிருந்து வரும் காவிரி நதிக்கு வடப் புறத்தில் விளங்கும் திருவேரகம் என்னும் சுவாமிமலை வாழ்பவரே! உமாதேவியின் ஒப்பற்ற குமாரரே! விநாயகருக்கு இளையவரே! திருமால் மருகரே! அரக்கர்களின் தலைகளைத் துணித்த பெருமிதம் உடையவரே! மருக்கொழுந்து முதலிய வாசனை நிறைந்த கூந்தலையுடைய பொதுமாதர் அடியேனை மயக்கி, மன்மதனுடைய காம நூலில் கூறிய தந்திர வகைகளைப் புரிந்து ஆசையை மூட்டி இதழூறலைப் பருகச் செய்ய, அதனால் அவர்களுடைய மலைப் போன்ற தனங்களில் உறவு செய்து பெரிய ஆசையுற்ற அடியேனைத் தினமும் தேவரீர் பிரியாமலும் பட்சம் மறவாமலும் என் பிழைகளைப் பொறுத்து உமது இரு திருவடிகளின் பேரின்பப் பெருவாழ்வைப் பற்ற அருள்புரிவீர்.

விரிவுரை

மருவே செறித்த குழலார் மயக்கி:-

மரு என்பது ஒரு வாசனை இலை. இதனையும் வேறு பல நறுமலர்களையும் முடித்து குழலுக்கு மாதர் மணமூட்டுவர். மணம் செறிந்த கூந்தலினால் விலைமகளிர் ஆடவரை மயக்குவர்.

கூந்தல் காடு, கண் வலை; ஆடவர் பறவை.

கூந்தலாகிய கானகத்தில் ஆடவராகியப் பறவைகள் சிக்கும்படி விலைமகளிர் கண்வலை வீசிப் பிடிப்பார்கள்.

“திண்ணிய நெஞ்சப் பறவை சிக்கக் குழற்காட்டில் கண்ணி
   வைப்பார் மாயங் கடக்குநாள் எந்நாளோ”     -தாயுமானார்

மதனாகமத்தின் விரகாலே மயலே எழுப்பி:-

காம நூல்களில் கூறிய முறைப்படி அம்மாதர்கள் பல தந்திரங்கள் புரிந்து இளைஞர்களுக்கு மிகுந்த மோகத்தை ஊட்டுவார்கள்.