பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 153

பொழிப்புரை

கவர்ச்சியுள்ள முகமுடைய வள்ளிபிராட்டியின் தனங்களில் பொருந்த வந்தருளிய நீதிபதியே! பழைய சிறந்த வேதத்தின் ஒப்பற்ற பெரும் பொருள்களுக்கு உட்பொருளாகிய ஓமெனும் ஒரு மொழிப் பொருளை சிவமூர்த்திக்கு உபதேசித்தருளிய குருநாதரே! தடையொன்றும் இன்றி அடியேனுக்கு, உமது திருவடியைக் காணுமாறு அருள் செய்த ஒப்பற்ற திருவேரகத்தில் உறையும் முருகக் கடவுளே! தருக்களுடன் கூடிய காவிரி நதிக்கு வடபுறத்தில் போருக்குரிய வேலைத் தாங்கி நிற்கும் பெருமிதம் உடையவரே! உலக மாயையில் சேர்ந்து, என் இல்லற வாழ்வில் அமைந்த அழகிய மனைவியின் கருவில் தங்கி உடம்பில் பத்துமாதம் ஊறி முதிர்ச்சியுற்று அழகுடன் நிலத்தின் நன்கு தோன்றியக் குழந்தைபோல் தேவரீர் எனக்கு அமைந்து, அடியேன் பிள்ளைப் பாசத்துடன் உம்மை உச்சி மோந்தும், கண்ணில் ஒத்தியும், முகத்துடன் முகஞ் சேர்த்தும் மகிழுமாறு, நீர் என் மலையன்ன புயத்தில் உறவு செய்து, என் மடியில் அமர்ந்து விளையாடி நாள்தோறும் உமது மணிவாயால் முத்தந் தந்தருள வேண்டும்.

விரிவுரை

பொருளாகி:-

இத் திருப்புகழில் அருணகிரிநாத சுவாமிகள் முருகப் பெருமானைக் குழந்தையாக வந்து இன்பந் தருமாறு வேண்டுகின்றார்.

“முருகா! என் இல்லக் கிழத்தியின் உதிரத்துதித்த குழந்தைபோல் நீ வந்து என்னுடன் மகிழ வேண்டும்” என்கிறார். பொருள்-புதல்வன்.

மகவாவினுச்சி விழியாநநத்தில் மலைநேர் புயத்தில் விளையாடி:-

மக வாவின்-மக அவாவின் என்று பதப்பிரிவு செய்க.

“முருகா! குழந்தைப் பாசத்துடன் உன்னை உச்சி மோந்தும், கண்ணில் ஒத்தியும், முகத்துடன் முகம்