பக்கம் எண் :


154 திருவேரகம் (சுவாமிமலை)

வைத்தும் அடியேன் மகிழுமாறு நீர் என் புயத்தில் தழுவி உறவாட வேண்டும்.”

மடிமீ தடுத்து விளையாடி நித்தம் மணிவாயின் முத்தி தரவேணும்:-

“முருகா; நீ என் மடித்தலத்தில் அமர்ந்து என்னுடன் குழந்தைபோல் விளையாடி உன் கனிவாய் முத்தந்தந்து அருள்புரிவாய்.”

முருகவேள் தரும் முத்தத்துக்கு விலையில்லை. ஏனைய முத்தங்களுக்கு விலையுண்டு என்று கூறுகின்றார் பகழிக் கூத்தர்.

கத்துந் தரங்கம் எடுத்தெறியக்
           கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
கரையில் தவழ்ந்து வாலுகத்தில்
           கான்ற மணிக்கு விலையுண்டு
தத்துங் கரட விகடதட
           தந்திப் பிறைக்கூன மருப்பில் விளை
தரளந் தனக்கு விலையுண்டு
           தழைத்துக் கழுத்து வளைந்துமணிக்
கொத்துஞ் சுமந்த பசுஞ்சாலிக்
           குளிர்முத் தினுக்கு விலையுண்டு
கொண்டல் தருநித் திலந்தனக்குக்
           கூறுந் தரமுண் டுன்கனிவாய்
முத்தந் தனக்கு விலையில்லை
           முருகா முத்தந் தருகவே
முத்தஞ் சொரியும் கடலலைவாய்
           முதல்வா முத்தந் தருகவே.

பாம்பனடிகள் தம் முதுமைப் பருவத்தில் கால் முறிந்து சென்னைப் பெரிய மருத்துவ விடுதியில் கட்டிலில் படுத்திருந்தார். அதிகாலை ஆங்கில துரைமகனாராகிய மருத்துவத் தலைவர் வந்தபோது, அடிகளார் படுத்திருந்த கட்டிலில் அவர் அருகில் ஒரு குழந்தை படுத்திருக்கக் கண்டார். துணுக்குற்றார். ‘சந்நியாசியாகிய அடிகளார் அருகில் குழந்தை யிருக்கக் காரணம் யாது?‘ என வியப்புற்று அருகில் சென்றார். குழந்தை மறைந்து