இல்லாமல் போவது போல், வினை தம்மைத் தொடாது ஓடிப் போகுமாறு பொடி செய்யவும், நன்மையை உட்கொள்ளவும் ஞான தவ சீலர்கள் சேர்ந்து வாழ்கின்ற சுவாமிமலையில் வாழ்கின்ற பெருமிதம் உடையவரே! இரவில் இருள் போன்றது என்று புகழ்கின்ற குழலினாலும், இராமபாணம் போன்ற கண்களாலும், இசை மயமான மொழிகளாலும் (இடை) தாங்கமாட்டாத கனமுள்ள தனங்களாலும், இல்லையென்று கூறும்படி அத்துணை நுண்ணியதான இடையாலும், இளைஞர்களுடைய உள்ளத்தை அரம் அறுப்பதுபோல் அறுத்து, காலை மாலைகளில் அந்த இளைஞர்கள் புகழ்ந்து தளருமாறு, அவர் முன் வந்து நியாயமின்றி மிகுந்த விலைகூறும் பொதுமகளிரின் ஆசை என்னைத் தொடராமல், அடியேனுக்கு உமது திருவடியைத் தேடும் அநாதி மொழியான ஞானத்தைத் தந்தருளுவீர். விரிவுரை இராவினிருள் போலும் பராவு குழலாலும்:- மாதர்களின் அவயவ நலன்களை முடி முதல் அடிவரை கூறுவது மரபு. பாதாதிகேச வர்ணணை என்பர். கூந்தல் மிகுந்த கரிய நிறத்துடன் இருப்பதனால் இருள் போன்றது என்று வியந்து கூறுவர். “கொந்துத் தருகுழல் இருளோ சுருளோ?” என்று வேறு ஒரு திருப்புகழிலும் கூறுகின்றனர். ஆடவருடைய மனம் இருள்வதற்கு அந்தக் கூந்தலின் இருள் ஏதுவாகின்றது என்ற குறிப்பையும் நுனித்துணர்க. கூந்தலின் அழகு இளைஞரை மயங்கச் செய்யும். “..............................செங்கழுநீர் மாலை சூடிய கொண்டையி லாதார சோபையில் மருளாதே” -(கொம்பனையார்) திருப்புகழ் இராம சரமாரும் விழியாலும்:- அடுத்து அம் மகளிரது கண்கள் மயக்கத்தைத்தரும். அக் கண்கள் கூரியவை. கணை போன்றவை, கணை உயிரை மாய்க்குந் தன்மையது. |