பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 159

கணைகளில் சிறந்தது இராமருடைய கணை. இராமசரம் குறி தவறாது; மாறுபட்டோரை மாய்க்க வல்லது.

அந்த இராம சரம் போல் இளைஞரின் உள்ளத்தை மாய்க்க வல்லது அம் மாதர்களின் கண்கள் என்று குறிப்பிடுகின்றார்.

இராக மொழியாலும்:-

இராகம்-பண். பெண்கள் மொழி இசைபோன்ற இனிமையுடையது.

இளையோர் நெஞ்சுராவி:-

இரும்பு அரம் இரும்பை அராவித் தேய்த்துவிடும். அதுபோல் இளைஞர்களுடைய உள்ளத்தை மகளிர் மயல் அராவி அழித்துவிடும்.

இரும்பு போன்ற உறுதியான உள்ளமும் அழியும் என்பது குறிப்பு.

இருபோதும் பராவி:-

இருபோதும்-காலை மாலை. காலையும் மாலையும் கடவுளை வணங்குவது ஆன்றோர் மரபு. இறைவன் தந்த உடம்பாலும் உரையாலும் உள்ளத்தாலும் இறைவனை வணங்குவதும் வாழ்த்துவதும் சிந்திப்பதும் கடமையாகும். இதனைக் காலைக் கடன், மாலைக் கடன் என்பர். காலைக் கடன் என்பதை இப்போது மலசலம் கழிப்பது என்ற பொருளில் பேசுகின்றார்கள். என்ன அறியாமை? கடவுளை வழிபடுவது காலைக்கடனாகும். இளைஞர் இதனை மறந்து காலையும் மாலையும் மகளிரைப் புகழ்ந்து மதிகெட்டு மயங்கித் தியங்கித் திரிவர்.

அடாத விலை கூறும் மடவார்:-

தம்மை விரும்புவோரிடம் மிகப் பெரும் அளவில் பொன்னை விரும்பிக் கேட்டுப் பெறுவர் பொது மகளிர். கோடீச்சுரன் கோவணாண்டியாக நொந்து வாடுவான்.

அநாதிமொழி ஞானந் தருவாயே:-

ஆதியில்லாதது அநாதி. அநாதியென்று மொழிகின்ற மெய்ஞானப் பொருளைத் தருமாறு சுவாமிகள் இப்பாடலில் முருகனிடம் வேண்டுகின்றார்.