| “நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி யிருக்க நேராக வாழ் வதற்கு னருள்கூர” -(நாவேறு) திருப்புகழ் “இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற ஏகபோகமாய் நீயு நானுமாய் இறுகும்வகை பரமசுகம் அதனையருள்” -(அறுகுநுனி)திருப்புகழ் அரியயன் அறிந்திடாத அடியிணை:- சிவபெருமானுடைய திருவடியைத் திருமாலே தேடினாராயின், முடியைத் தேடிக்காணாது அயர்ந்த பிரமதேவராலும் காணமுடியாதது அத்திருவடி என்பது தேற்றமாம். யாம் காண்போம் என்று அகந்தையுற்றார் யாவரேயாயினும், அவனது திருவடித் தாமரையைக் காணுதற்கு முடியாது. அன்பு நெறி ஒன்றினாலேயே அவனை எளிதிலுணரலாம். அப் பரமபதி விண்ணோர்களேத்த மறைந்திருப்பான். கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தாற்போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நிற்பன். திருமால் தேடித்தேடி யிளைத்து நின்றதை மணிவாசகர் கூறும் அழகினைக் காண்க. “நான்முகன் முதலா வானவர் தொழுதெழ ஈரடியாலே மூவுல களந்து நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப் போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன் றடிமுடி யறியும் ஆதர வதனிற் கடுமுரண் ஏன மாகிமுன் கலந்து ஏழ்தலம் உருவ இடந்துபின் எய்த்து ஊழி முதல்வ சயசய வென்று வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்........” சுவாமிமலை:- சுவாமிமலை என்பது நான்காம் படைவீடு ஆகும். அது அநாகத க்ஷேத்திரம். திருவேரகம் என்பதும் அதுவே. |