பேரொலியுண்டாகும். அதன் உடம்பு உகாந்த காலத்து இருளின் குழம்பால் அமைத்தது போலவும்இருக்கும். அதன் கண்களில் நெருப்பு மழை சிந்திய வண்ணம் இருக்கும். காற்றினும் வேகமுடையது. “தமா குரங்களும் காரிருட் பிழம்பு மெழுகிய அங்கமும் பார்வையிற் கொளுந்து தழலுமிழ் கண்களுங் காளமொத்த கொம்பும் உளகதக் கடமாமேல்” -திருப்புகழ் இத்தகைய எருமைக்கடாவின் மீது வீரங் கெடாமல் ஆரோகணித்து வருபவன் இயமன். சமனார்:- எல்லா உயிர்களிடத்திலும் சமமாக நடப்பவன், ஆதலின் சமன் எனப் பேர் பெற்றான். ஏழை தனவந்தன், கற்றவன், கல்லாதவன், அரசன், ஆண்டி, இளையவன், முதியவன் என்றுபார்க்காமல் ஒன்று போல் பார்த்து உயிரை உடம்பிலிருந்து பிரிப்பவன் எமன். கடாவி விடுதூதர்:- அளவற்ற புண்ணியமும், அத்துடன் சிறிது பாவமும் உள்ள உத்தம ஆன்மாக்களைப் பற்ற இயமனேவருவான். மற்றவர்களைப் பற்ற இயமதூதர்கள் வருவார்கள். மார்க்கண்டேயர், சத்தியவான் இவர்களைப் பற்ற இயமனே வந்தான். இன்றும் பெரிய மனிதர்களைப் பற்ற காவல் தலைவரே வருவார். இயமன்-அடக்குபவன். எல்லா உயிர்களையும் அடக்குபவன். அவனுடைய ஆணையின்படி எண்ணில்லாததூதர்கள் உலகில் உள்ள உயிர்களை அவ்வுயிர்களின் விதிப்படி வந்து பற்றி இழுத்துக் கொண்டுசெல்வார்கள். “காலனார் வெங்கொடுந் தூதர் பாசங்கொடென் காலினார் தந்துடன் கொடு போக” -திருப்புகழ் |