கெடாத வழிபோலும்:- தவறுதலின்றி நேர்வழியில் வருவதுபோல கால தூதர் வந்து பற்றுவர். இந்த உலக வாழ்க்கையின் இன்பம் நிலையில்லாதது என்று அருணகிரிநாதர் இங்கேகுறிப்பிடுகின்றார். இதற்கு இரண்டு உவமைகள் கூறுகின்றார். கனாவில் விளையாடுங் கதைபோலும்:- கனா நிகழ்ச்சி. கனவில் கண்ட அத்தனையும் விழித்தவுடன் மறைவதுபோல் இவ்வாழ்வு மறையத்தக்கது. இடாது பலதேடும் கிராதர் பொருள் போலும்:- ஏழைகட்கு இடாமல் நிலம், புலம், வீடு, மாடு, வண்டி, வாகனம், பொன், மணியென்று பலப்பலதேடிவைப்பர். அப்படித் தேடி வைத்த கொடியவருடைய பொருள்கள் விரைவில் பல வழியிலும் சென்றுமறைந்து போகும். வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யருபினால் பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தால் தேடிப் பதைத்துத் திருட்டிற் கொடுத்துத்திகைத் திளைத்து வாடிக் கிலே சித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே -கந்தரலங்காரம் எனவே கனாவைப் போலவும், அறஞ் செய்யார் பொருளைப் போலவும் அழியும் இயல்புடையது வாழ்வு.இவ்வாழ்வினைச் சதமென நினைத்தல் அறிவின்மையாகும். சதாவின் மொழியாலிங் கியானுமுனை யோதும்படி பாராய்:- சதா இன் மொழியால் இங்கு எனப் பதப்பிரிவு செய்க. எந்நாளும் முருகனை இனிய சொற்களைத் தொடுத்துப் பாடி ஓதுதல்வேண்டும். காதல் மீதூர்ந்துஉள்ளங்கசிந்து, கண்ணீர் பெருகி இறைவனைத் துதிப்பதற்கு ஓதுவது என்று பேர். “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது” -தேவாரம் |