பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 165

“பாதபங்கய முற்றிட உட்கொண்டோது கின்ற
       திருப்புகழ்”            -(கோலகுங்கும) திருப்புகழ்

விடாது நடநாளும் பிடாரியுடனாடும் வியாகரண ஈசன்:-

சிவபெருமான் காளியுடன் நடனம் புரிந்ததை இங்கே கூறுகின்றார். காளி ஒரு காலத்தில் உலகைநடுக்கிய போது திரு ஆலங்காட்டில் இறைவர் அவளுடன் சண்ட தாண்டவம் ஆடி அவளை அடக்கியருளினார்.

அம்பிகையின் சகஸ்ரநாமங்களில் பட்டாரிகா என்று ஒரு நாமம் வரும். இது படாரிகா என மருவிபிடாரி என மருவியது. தமிழ் சாசனங்களில் படாரி மான்யம் என இருக்கிறது.

விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வு விநாசமுற:-

பகாரம்-பகரம் என்ற சொல் சந்தத்தை நோக்கி பகாரம் எனவந்தது. பகரம்-அலங்காரமாக.விகாரம்-வேறுபாடு. அறநெறிக்கு வேறுபட்ட சூரபன்மன் அலங்காரமாக ஆடம்பரமாக வாழ்ந்தான். அவன்வாழ்க்கைக்கு வேல் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

தொடாது நெடுதூரந் தடாது...........ஞானத் தபோதனர்கள்:-

பிராணவாயு தொட முடியாதது; தடுக்க முடியாதது. தொடாது தடாது என்ற சொற்களால் இதனை நினைவுபடுத்துகின்றார்.

நீளமாக ஓடுகின்ற அவ் வாயுவை யோகநெறியால் ஞானிகள் அடக்குவர். அத்துடன் சுவை, ஒளி, ஊறு,ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களையும் அடக்குவர்.

“சுவையொளியூ றோசை நாற்றமென் றைந்தின்
   வகைதெரிவான் கட்டே யுலகு”.
“உரன்என்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
   வரன்என்னும் வைப்புக்கோர் வித்து”         -திருக்குறள்

கருத்துரை

சுவாமிமலை முருகா! சதா உனை ஓத அருள்செய்.