யுடையவரே! அழகு நிரம்பிய வள்ளியம்மையாருடைய பொன்னடிக் கமலங் களின் மீது, குளிர்ந்த மணிமகுடமானது பொருந்த மகிழ்ச்சியுடன் நாளும் பணிபவரே! செம்பாகமான சொல்லமைப்பு மிக்க நூல்களைப் பாடும் திறமுடைய நக்கீரதேவருக்கு, தமிழிலக்கணங்களின் இயல்புகளை செங் கனிவாய் மலர்ந்து ஓதுவித்து, அடி மோனை சொல் என்ற யாப்புக்கு இணங்க “உலகம் உவப்ப” என்று அடியெடுத்துத் தந்து, திருமுருகாற்றுப் படையெனும் சீரிய நூலைப் பாடச் செய்த கந்தப் பெருமானே! பெரியவரே! இந்திரியங்களை வெல்லவல்ல மாதவர்கள் மனங்கசிந்து உருகி வழிபட்டு உமது இரு கமலப் பாதங்களில் உய்வுபெற்ற சுவாமிமலை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே! பாவத்திற்கு உறைவிடமாகிய பறவை முட்டையை யொத்த உடம்பில், பொருந்தி இருந்து முடிவில் அப்பறவை முட்டையுடைந்தாற்போல், உடலைவிட்டு உயிர் நீங்குவதாலாகிய துன்பத்தை இங்கு அடியேன் அடையலாமோ? அங்ஙனம் அடையாவண்ணம் அடியேன் பாடிய புன்சொற்களையுடைய பாடலின் மீதும் தேவரீருடைய தண்ணருள் மனங்கமழச் செய்து மகிழ்ச்சியுடன் நாளும் வந்து அருள்புரிவீர். விரிவுரை கடிமாமலர்க்கு :- மலர்களுக்குள் மிகவுஞ் சிறந்தது கடப்ப மலரே என்பதும் அம்மலர் கொண்டு அர்ச்சிக்கில் அப் பரமபதியின் நட்புண்டாகும் என்பதும் இதனால் தெரிய வருகிறது. வடிவார்........பணிவோனே :- வள்ளி நாயகியை முருகவேள் தொழுதாரென்பது ஆண்டவன் ஆன்மாக்களை யாட்கொள்ளும் எளிமையைத் தெரிவிக்கின்றது. உலகாமுவப்ப :- “உலகாமுவப்ப என்று உன் அருளால் அளிக்க உகந்த” என்று பிரித்துப் பொருள் கொள்வாரும் உளர். |