முருகப் பெருமான் நக்கீரரை யாட்கொண்ட வரலாற்றைத் திருப்புகழ் விரிவுரை இரண்டாம் தொகுதி 276-ஆம் பக்கம் பார்க்க. செடிநேருடற் குடம்பை :- குடம்பை என்பதற்குப் பரிமேலழகர் உரை செய்திருக்கும் திறனை நோக்குக. குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு. -திருக்குறள். முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள்ளிருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்துபோன தன்மைத்து உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு. (பரிமேலழகர்) உடம்பும் உயிரும் ஒன்றாகவே யுண்டாகிப் பிறந்து, வளர்ந்து இருந்து, உண்டு உவந்து பின் உடம்பைவிட்டு உயிர்மட்டும் நீங்கிவிடுகின்றது. முட்டையும் அதனுட் பறவையும் ஒன்றாகவே பிறந்து, பறவை வளர்ந்தபின் முட்டையை உடைத்துக்கொண்டு பறந்துபோய் விடுகின்றது. உயிர் பறவையையும் உடம்பு முட்டையையும் ஒப்பாகு மாறுணர்க. முட்டையிற் பிறக்கும் உயிர்கள் பாம்பு எறும்பு முதலிய பிற உயிர்களுமுளவேனும், பறக்கும் இயல்பு பறவைக்கே யுளவாதலின், பறவையை யுவமித்தனர். உடைத்துக் கொண்டேகிய பறவை அம்முட்டையில் பின் புகாதவாறுபோல் உடம்பினின்றுமேகிய உயிர் மீண்டும் இவ்வுடம்பை யடையாதென்றறிக. நட்பு என்றது நட்பின்றிப் போதலை யுணர்த்துகின்றது. “குடம்பைதனின் மேவியுற்று இடிந்த படிதா னலக்க ணிங்ஙன் உறலாமோ” என்ற நம் சுவாமிகளது திருவாக்கின் அமைப்பையும் அழகையும் ஆழத்தையும் அருமையையும் அன்பர்கள் உற்று நோக்கி உள்ளம் மகிழ்க. மேற்போந்த திருக்குறளோடு ஒப்புநோக்கி உவப்புறுக. |