முதுவேதன் வெட்க-கிழப் பிரமன் நாணுமாறு, அன்று-அந்நாளில், திருவாய்மை செப்பி நின்ற-பிரணவத்தின் பேருண்மையைச் சொல்லியருளிய, முருகோனே-முருகப் பெருமானே! திரள் ஆம்மணிக்குலங்கள்-திரண்டுள்ள இரத்தினக் குவியல்கள், அருண உதயத்தை வென்ற-சூரிய உதய ஒளியை வென்று விளங்கும், திருவேரகத்து அமர்ந்த-திருவேரகம் என்ற திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள, பெருமாளே-பெருமையின் மிகுந்தவரே! விழியால் மருட்டி நின்று-கண்ணினால் ஆடவரை மயக்கி நின்றும், முலை தூசு அகற்றி-தனங்களின் மீதுள்ள ஆடையை அகற்றியும், மண்டு விரக அனலத்து அழுந்த நகையாடி-மூண்டு எழுகின்ற காம அக்கினியில் அழுந்துமாறு நகை செய்தும், விலையாக மிக்க செம்பொன் வரவே பரப்பி- விலையாக மிகுந்த செம்பொன் வருமாறு கட்டில் மெத்தை இவைகளைப் பரப்பி வைத்தும், வஞ்ச விளையாடலுக்கு இசைந்து-வஞ்சகம் நிறைந்த லீலைகளைப் புரிவதற்கு இணங்கியும், சிலநாள் மேல்-சில நாட்கள் கழிந்த பின்னர், மொழியாத சொற்கள் வந்து-சொல்லாத சொற்களைச் சொன்னதாகச் சொல்லி எதிர்த்து வந்தும், சிலுகு ஆகி-சண்டையிடுகின்ற, தொந்த முழுமாயையின் பிணங்கள் வசம் ஆகி-பந்தத்தைத் தருகின்ற முழு மாயக்காரிகளாகிய பிணங்களாம் பொது மாதர்களின் வசத்தில் அகப்பட்டு, முடியாது-அடியேன் அழியாமல், பொன் சதங்கை தருகீத-பொன்னாலாகிய கிண் கிணிகள் தருகின்ற கீதஒலியும், வெட்சி துன்று-வெட்சி மலரும் சேர்ந்துள்ள, முதிராத நல்பதங்கள் தருவாயே-இளமை பொருந்திய தேவரீருடைய திருவடிகளைத் தந்தருளுவீர். பொழிப்புரை மழை பொழிகின்ற கரிய மேகம் போன்ற இருண்ட உருவத்தையுடைய இயமன் அஞ்சும்படி, போர் செய்ய வல்ல திருவடியைத் தூக்கிய சிவ பெருமான் மகிழ்கின்ற புதல்வரே! தேவேந்திரனுடைய உள்ளங் குளிர்ந்த பொன்னுலகைக் காத்தருளிய வல்லமை உடையவரே! பரிசுத்தமானவரே! மான் ஈன்ற கரும்பு போன்ற வள்ளிநாயகியைத் தழுவுகின்றவரே! செழுமையுடைய தாமரை மலரில் வாழ்கின்ற கிழ வேதியனாகிய பிரமன் நாணுமாறு அந்நாள் பிரணவப் பொருளை பொழிந்தருளிய முருகக் கடவுளே! திரண்ட இரத்தினக் குவியல்கள் உதய சூரிய ஒளியைப் போல் ஒளி செய்து விளங்கும் திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே! கண்ணால் இளைஞரை மயக்கியும், |