பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 7

தனங்களின் மீதுள்ள ஆடையை அகற்றியும், மூளுகின்ற ஆசையாகிய அக்கினியில் அழுந்தச் செய்து புன்னகை புரிந்தும், விலையாக மிகுந்த செம்பொன் வரும்படி மெத்தை முதலியவைகளைப் பரப்பி வைத்தும், வஞ்சக லீலைகளைச் செய்தும் சில தினங்கட்குப் பின்னர், சொல்லாத சொற்களைச் சொன்னதாகச் சொல்லி சண்டையிட்டும் தோதகம் புரிகின்ற முழு மாயக்காரி களான விலை மகளிரது வசமாகி அடியேன் அழியாமல், பொற்சதங்கை ஒலிக்கும் வெட்சி மலர் தரித்த இளம் பாதமலர்களைத் தந்தருள்வீர்.

விரிவுரை

விழியால் மருட்டி :-

பொதுமாதர்கள் தங்கள் கண்களாகிய வலையை வீசி இளைஞரை மயக்கி இடர் படுத்துவார்கள்.

விரகானலத் தழுந்த :-

விரக அனலத்து அழுந்த-காமமாகிய அக்கினியில் மூழ்க. காமம் நெருப்பினுங் கொடியது. நெருப்பினால் துயருற்றோற் நீருள் குளித்துப் பிழைக்கலாம். நீருள் குளிப்பினும் காமஞ் சுடும். குன்றேறி ஒளிப்பினுங் காமஞ்சுடும்.

பொழி கார்முகிற்கிணைந்த யமராஜன் :-

மழை பொழிகின்ற இருண்ட மேகம்போல் இயமன் கரிய உருவுடன் காண்பார்க்கு அச்சத்தைக் கொடுத்துக் கொண்டு வருவான்.

பொரு தாள் :-

சிவபெருமான் இடப்பாதத்தால் இயமனை உதைத்தருளினார். அப்பாதம் போர் செய்ய வல்லது. அத்திருவடி இராவணனை அடர்த்தது; முயலகனை மிதித்தது; சந்திரனைத் தேய்த்தது.

ம்ருகக் கரும்பு :-

மிருகம்-மான், மான் போன்ற-கரும்பு போன்ற இனிய குணம் படைத்தவர் வள்ளியம்மையார்.