சிறிது சிறிதாக வளர்ந்து, அதனால் தாயின் வயிறு பலாப்பழம் போல் ஆக, கரு முற்றியபின் தலகீழாய் அழுவிப் பூமியில் பிறந்து ஒன்பது ஓட்டைகளையுடைய ஒரு பதுமைபோல் பிராணவாயு என்ற கயிற்றினால் ஆடி இப்பூமியில் பொருந்தி, மலசலத்துடன் தவழ்ந்து, அழுதும் அழுகை ஓய்ந்தும், தாய் முலைப்பால் குடித்து ஒரு குழந்தையாய் இப்பிறப்பிற் செய்யும்படி விதித்த செயல்களைச் செய்து, முற்பிறப்பிற் செய்த தீமை காரணமாக உருவம் பொருந்தும்; தேவரீரை அறவே மறந்து பாவம் மென்மேல் வளர, நாள்தோறும் மனம் உடைந்து அழிபட்டு உடல் உருக்குலைந்து நிற்கும் அடியேனுக்கு உமது திருவடித் தாமரையைத் தந்தருள்வீர். விரிவுரை பனியின் விந்துளி போலவே:- உயிர்கள் தாம் செய்த நல்வினை தீவினைப் பயன்களாகிய புண்ணிய பாவங்களை ஒளியுலகிலும் இருள் உலகிலும் அனுபவிக்கின்றன. உயிர்கள்- சிற்றறிவுடையன; வினை-சடம்; ஆதலால் வினைகளை அந்தந்த உயிர்களுக்குப் பேரறிவும் பேராற்றலும் படைத்த ஒரு பரம்பொருள் ஊட்டுகின்றது. எனவே செய்வான், செய்வினை, வினைப்பயன், அதனை ஊட்டுவான், என்ற நான்கினையும் நன்கு உரைப்பது சைவ நூல் ஒன்றேயாகும். செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக் கொண்டே இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக் கில்லை யென உய்வகையால் பொருள் சிவன் என்றருளாலே உணர்ந்தறிந்தார்.
-பெரியபுராணம். இவ்வண்ணம் வினைப்பயன் நுகர்ந்தபின் கலப்பான வினைப்பயனை நுகர்தற் பொருட்டு இறையாணையால் அவ்வுயிர்கள் மழை வழியாக இப்பூதலத்தைச் சேர்கின்றன. காய் கனி மலர் நீர் தானியம் இவற்றில் கலந்து நிற்கின்றன. அவற்றை யுண்ட ஆணிடம் நியதியின்படி சேர்ந்து அறுபது நாள் கருவுற்றிருந்து பெண்ணிடம் சேர்கின்றன. அப்படி அக்கரு ஆணிடம் இருந்து பெண்ணிடம் சேர்கின்றபோது அது புல்லின் மீதுள்ள பனித் துளிபோன்ற சிறிய அளவுடையதாக இருக்கின்றது என்பதை “அறுகுநுனிபனியனைய சிறிய துளி” என்கின்றார் அடிகளார் திருவிடைமருதூர்த் திருப்புகழில். |