குழவி தவழ்ந்து செல்லும். அழுதாறியே:- அக்குழவி குவா குவா என்று அழுது மீண்டு ஆறுதல் அடையும். அனைமுலையின் மயமயின்று:- குழவி கருவுற்றபோதே அதன் நலத்துக்கென இறைவன் அமைத்த தனங்களில் பால் சுரந்தும், அது பிறர் கண்ணுக்குப் புலப்படாமல் சுரந்தும் நிற்கும். குழவி அத் தாய்ப் பாலைக் குடித்து வளரும். ஒரு பாலனாய் இகமுடைய செயல்மேவி:- ஒரு பாலகனாய் வளர்ந்து இப்பிறப்பில் செய்யும்படி விதித்த செயல்களைச் செய்து உலாவும். வடிவ முன்செய்த தீமையால் எயும்:- எயும்-ஏயும்; பொருந்தும். இந்த வடிவமானது முற்பிறப்பில் செய்த தீமை காரணமாக வந்து பொருந்தும். ஆன்மாக்களின் கன்மங்கள் பல திறப்பட்டனவாதலின், உருவங்களும் பல திறப்பட்டிருக்கின்றன. உனையு மற மறந்து:- இந்த உடம்பையும், உடம்பில் கண், காது, மூக்கு, நாக்கு முதலிய உறுப்புக்களையும் உணவுப் பொருள்களையும் ஒளிப் பொருள்கைளையும் அமைத்துக் கருணையால் வழங்கிய இறைவனை நினைப்பதுவே புண்ணியங்கட்கெல்லாம் மேலான தலையாய புண்ணியமாகும். இங்ஙனம் நினைப்பது நன்றியுணர்வின்பாற் பட்டதென உணர்க. எல்லையற்ற உதவிகளைப் புரிந்துள்ள இறைவனது திருவருளை மறப்பதுவே கழுவாயில்லாத பாவமாகும் நன்றி மறப்பதாகும். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வி்ல்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. - திருக்குறள், எனவே “இறைவனை அறவே மறந்து” என்கிறார், அகமீதுபோய்;- அகம்-பாவம். பாவமானது மேல் மேல் வளரத் தீமைகளைப் புரிந்து. |