பக்கம் எண் :


16 திருப்புகழ் விரிவுரை

 

தினதினமும் மனமழிந்துடல் நாறினேன் :-

நாளும் நாளும் உள்ளம் உலைந்து உடம்பு உருக்குலைந்து விட்டேன்.

இனி உனது கழல் தாராய் :-

“ சேய் பிழையைத் தாய் பொறுப்பது போல் இறைவனே, சிறியேன் பிழையைப் பொறுத்து இனி அடிமையேன் உய்யும் பொருட்டு உமது திருவடிகளைத் தந்தருளுவீ்ர்” என்று அருணகிரிநாதர் உள்ளங்குழைந்து உருகி வேண்டுதல் புரிகின்றார்.

தனன... விருதுசொலும் அவுணோர்கள்:-

பல வகையான வாத்தியங்கள் ஏழு கடல்போல் ஒலிக்க, தங்கள் வீரத்தின் பெருமையைக் கூறி வீரமுழக்கம் புரிகின்ற அசுரர்கள்.

தோல்-யானை. அரி-வலிமை. யானைகளும். வலிமையுள்ள குதிரைகளும் மாண்டழிந்தன.

குருதி எண்டிசை மூடவே:-

உதிர வெள்ளம் ஆறுபோல் எட்டுத் திசைகளிலும் பெருகிப் பூமியை மறைத்தது.

சிறையினங் களிகூரவே:-

சிறை-இறக்கை. சிறகுடன் பறக்கும் காக்கை, கழுகு, பருந்து முதலிய பறவைகள், அசுரர்களின் பிணங்களின் நிணங்களை யுண்ணலாம் என்று எண்ணி மகிழ்ந்தன.

சிறை-சிறைச்சாலை. சூரபன்மனால் சிறையில் கிடந்த தேவர்கள், சித்தர்கள், அரம்பையர்கள் முதலியோர்கள், அசுரர்கள் மாண்டதால், நமக்குச் சிறைவாசம் ஒழிந்தது என்று கருதி உவகையுற்றார்கள் என்றும் கொள்ளலாம்.

சிவன் மகிழ்ந்தருள் ஆனைமா முகன்:-

மூத்த மகனிடம் பிதாவுக்கும் இளைய மகனிடம் தாய்க்கும் அதிக விருப்பம் அமைவது உலகியல் ஆதலின் சிவபெருமான் மகிழ்கின்ற விநாயகர் என்றனர்.