பெருந்தலைவராம், உலகிலுள்ள உயிர்கட்கெல்லாம் புகலிடமாகிய சீகாழிப் பதியில் திருவவதாரம் செய்த ஸ்ரீஞான சம்பந்தமூர்த்தியைப்போல் இறப்பை நீக்கும் அமிர்தம் போன்ற தேவார அருட்பாக்களைப் பாடுமாறு அடிமையேனுக்குத் திருவருள் புரிவீர். விரிவுரை புமியதனிற் பிரபு:- பூமி என்பது புமி எனக் குறுகி நின்றது. பூவுலகிற்கு ஸ்ரீஞானசம்பந்த சுவாமிகளே தலைவர். அவரை ஒப்பாரும் மிக்காருமில்லை. பெருந்தலைவர் என்பதற்கு அடையாளம் சிவிகை, சின்னம், விருது இவைகள் இருத்தல் வேண்டும். ஏனைய தலைவர்கள் இவைகளைத் தாமே தயார் செய்து கொள்வார்கள். நம் சம்பந்தத் தலைவருக்குச் சிவபெருமானே சிவிகை, சின்னம், முதலியவைகளைத் தந்தருளினார். அவ் வரலாறு கீழ் வருமாறு: திருஞான சம்பந்தருக்குச் சிவபெருமான் முத்துச் சிவிகை அருளியது பாலறாவாயராகிய நம் திருஞானசம்பந்த நாயனார் திருப்பெண்ணாகடத் திருத்தூங்கானை மாடம் என்னுந் திருத்தலத்தைத் தொழுது, திருவரத்துறை என்னும் அரும்பதியை வணங்க விரும்பிச் செல்லும்போது, இதற்கு முன்னரெல்லாந் தமது திருத்தாதையரது தோளின் மேலமர்ந்தருளும் நியமமொழிந்து, தமது பாதபங்கயம் சிவந்து வருந்த, மெல்ல மெல்ல நடந்து சென்று மாறன்பாடி என்னுந் திருத்தலத்தை யடையும்போது அப்பரம குருமூர்த்தியின் திருவடித் தளர்வினைக் கண்டு வருந்தினான் போல் சூரியன் மேற்கடலில் வீழ்ந்தனன் வெம்பந்த நீக்கும் நம் சம்பந்தப் பிள்ளையார் அன்றிரவு அப்பதியில் திருவஞ்செழுத்தை யோதித் தங்கினார். திருவரத்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் சம்பந்தப் பெருமானுடைய திருவடியின் வருத்தத்தைப் பொறாதவராய் ஏறுதற்கு முத்துச் சிவிகையும், மணிக்குடையும், கூறியூதக் குலவு பொற் சின்னங்களும் அமைத்துக் கொடுக்கத் திருவுளங் கொண்டு அவ்வூர் வாழும் மேலோர் கனவிற் தோன்றி, “ஞான சம்பந்தன் நம்பால் வருகின்றான்; அவனுக்குத் தருமாறு முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் முத்துச் சின்னங்களும் நம் திருக்கோயிலில் வைத்திருக்கின்றோம். நீங்கள் அவைகளை அவன்பால் கொண்டு கொடுங்கள்” என்று பணித்தருளினார். |