ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான் மான முத்தியின் சிவிகை மணிக்குடை ஆள சின்னம் நம் பாற் கொண் டருங்கலைக் கோன வன்பால் அணைந்து கொடுமென
-பெரியபுராணம். அவர்கள் ஆலமுண்ட அண்ணலின் திருவருளையும் திருஞான சம்பந்தருடைய பெருமையையும் உன்னி உள்ளத்தில் உவகையும் வியப்பும் எய்தி, நீராடி விடியற்காலை திருக்கோயிலின் திருக்கதவந் திறந்து பார்க்க அவைகள் அவ்வாறிருக்கக் கண்டு மிகவும் விம்மிதமுற்று, அவைகளை எடுத்துக் கொண்டு, திருஞானசம்பந்தப் பெருமானை எதிர்கொண்டு சென்றனர். சிவபெருமான் ஞானசம்பந்தர் கனவிலும் சென்று, “குழந்தாய்! முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் முத்துச் சின்னங்களும் உனக்குத் தந்தனம். அவைகளைக் கொண்டு நம் பதிகள் தோறும் வருக” என்று கட்டளை யிட்டருளினார். சம்பந்த அடிகள் கண் துயிலுணர்ந்து எந்தையாரது எளிவந்த வான் கருணையை உன்னிஉள்ளம் உவந்து, நீராடி திருவரத்துறைக்கு வருவாராயினார். அவ்வூர் வாசிகள் எதிர்கொண்டு திருவடியில் வீழ்ந்து பணிந்து பாம்பணிந்த பரமனது கட்டளையை விண்ணப்பித்தனர். சம்பந்த மூர்த்தி அவைகள் இறைவன் திருவருள் மயமாதலால் சோதிமுத்தின் சிவிகையை வலம் வந்து நிலமுறப் பணிந்து அச்சிவிகையின் ஒளி வெண்ணீறு போன்று விளங்கலால் அதனையுந் துதித்து, அச்சிவிகை திருவருள் வடிவாதலின் திருவஞ்செழுத்தையோதி எல்லாவுலகமும் ஈடேற அதன்மீது எழுந்தருளினார். முத்துச் சின்னங்கள் முழங்கின; அடியவர் அரகர முழக்கஞ் செய்தனர். முத்துக் குடைகள் நிழற்றின. வேதங்கள் முழங்கின; புங்கவர் பூமழை பொழிந்தனர். பல்குவெண் கதிர்ப் பத்திசேர் நித்திலச் சிவிகைப் புல்கு நீற்றொளி யுடன்பொலி புகலி காவலனார் அல்கு வெள்வளை யலைத்தெழு மணிநிரைத் தரங்கம் மல்கு பாற்கடல் வளர்மதி யுதித்தென வந்தார். -பெரியபுராணம். இதுவேயுமன்றி, அரசன் எதையும் தனது ஆணையால் நடாத்துவான் “இது என் ஆணை” என்று கட்டளையிடுவான்; அதேபோல் நம் அருட்பெருந்தலைவரும் “ஆணை நமதே” என்று கூறுமாறு காண்க. |