“நடுவிருளாடு மெந்தை நனி பள்ளியுள்க வினை கெடுதல் ஆணை நமதே” -(திருநனிபள்ளி) தேவாரம். “ஆனசொன் மாலையோது மடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே” -(கோளாறுபதிகம்) தேவாரம். புகலி:- புகலி என்பது சீகாழிக்குரிய பன்னிரண்டு பேர்களில் ஒன்று. ஊழி பெயரினும், உலகம் அழியினும் அழியாத அத்தோணிபுரமே தங்கட்குத் தஞ்சமாகத் தேவரும் மற்று யாவரும் புகுவதால் அப்பதிக்குப் புகலி என்ற திருப்பெயருண்டாயிற்று. வித்தகர்:- வித்தகம்-ஞானம். ஞானமுடையோர் வித்தகர். அமிர்தகவி:- திருஞான சம்பந்தருடைய தேவாரம் அமிர்தகவி. அமிர்தம் இறப்பை நீக்கும்; சம்பந்த மூர்த்தியின் தேவாரமும் இறப்பை நீக்கும். சான்று பின்வறுமாறு காண்க. திருஞானசம்பந்தர் விடம் தீர்த்தது நமது திருஞானசம்பந்தப் பெருந்தகையார் திருச்செங்காட்டங் குடியினின்றும் திருமருகலை யடைந்து இறைவனை வணங்கி அங்கிருக்கும் நாளில், ஒரு வணிகன் வழிப்போக்கனாய் ஒரு கன்னிகையை அழைத்துக் கொண்டு வந்து கோயிலின் பக்கலில் ஒரு மடத்திலே இரவில் கண் துயிலும்போது பாம்பு தீண்டி இறந்தான் அக்கன்னி அவனைப் பாம்பு தீண்டியுந் தான் தீண்டாமல் இருந்து வருந்தி அழுது புரண்டு அரற்றினாள். பற்பல முயற்சிகள் செய்தும் விடம் தீர்ந்து அவன் பிழைத்தானில்லை. அதனைக் கண்ட அப்பெண் பெரிதும் வருந்தி விடியற்காலையில், அன்னையையும் அத்தனையும் விட்டுப் பிரிந்து, “உன்னைத் துணைப்பற்றித் தொடர்ந்து வந்தேன். நீ பாம்பின் வாய்ப்பட்டு மாண்டனை; என்னைத் தனியாளாக்கிச் சென்றனை. என் துன்பத்தை யகற்றி என்னைக் காக்க வல்லார் யாவர்? என் துன்பத் தீயை அணைக்கும் கருணை மேகத்தை எங்கு சென்று தேடுவேன். வணிககுல மணியே! யானும் இறந்து உன்னுடன் வருவேன்” என்று வாய்விட்டு புலம்பி, திருக்கோயிற் றிருவாயில் திசையை நோக்கி “அடியவர்களாய அமரருய்ய ஆலமுண்ட நீலகண்ட நின்மலனே! மாலயன் |