காணாத மணிவிளக்கே! வெந்து சாம்பரான மதனனை இரதிதேவி வேண்ட உய்வித்து உதவிய கருணைக் குன்றமே! பாலனுக்காகக் காலனை யுதைத்த பரம்பரனே! அருட்கொண்டலே! இந்த விடக் கொடுமை நீங்குமாறும், ஏழையேன் உய்யுமாறும் இன்னறுள் புரிவாய்! மருகற் பெருமானே! மாசிலாமணியே!” என்று, இறைவனைக் கூவி முறையிட்டாள். இத்துதியுடன் கூடிய அழுகுரல், காலையில் கண்ணுதலை வணங்க வருகின்ற கவுணியர்கோன் (சம்பந்தர்) திருச்செவியில் வீழ்ந்தது. அக் கருணைக் கடலின் உள்ளம் உருகியது. ஓடினார்; கண்டார்; கழிப்பெருங் கருணை வள்ளலாகிய அவர் உள்ளத்தில் பெருகிய அருள் வெள்ளத்தினால் அம்மங்ையைக் குளிர்வித்தார், “அம்மா! அஞ்சாதே; நினக்குற்ற துயர் யாது? கூறுக” என்றார். அம்மடவரல் கண்ணருவிபாய அப் பரம குருமூர்த்தியின் பாத பங்கயத்திற் பணிந்து கை குவித்து நின்று “அண்ணலே! அடிமையேன் வைப்பூரில் வாழும் தாமன் என்னும் வணிகனுடைய மகள். இங்கு இறந்த இவர் என் பிதாவினுடைய மருகர். என்னுடன் தோன்றிய என் மூத்தோர் ஆறு பெண்களையும் இவருக்குத் தருவதாகச் சொல்லிச் சொல்லி இவரை ஏமாற்றி வேறிடத்தில் பொருள் நிரம்பப் பெற்றுக் கொடுத்துவிட்டனர். என்னையும் இவருக்கென்று சொல்லி வைத்திருந்து பிறகு ஒரு தனவந்தனுக்குத் தர முயன்றார். அதனால் இவர் தளர்ந்து உள்ளம் உடைந்து போனார். இவருடைய ஆறாத துயரைக் கண்டு இவருடன் யான் பெற்றோரை விட்டுப் போந்தேன் இவர் ஈண்டு அரவந் தீண்டி மாண்டார். கவிழும் கலத்துள் நின்றார்ப்போல் மயங்கியழும் இப்பாவியைக் காக்குங் கடவுளாகத் தேவரீர் வந்தருளினீர்” என்று தன் துன்பத்தையும் வரலாற்றையுஞ் சொன்னாள். அதனைக் கேட்ட ஆளுடைய பிள்ளையார் அருள் சுரந்து, “சடையா யெனுமால் சரணீ யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவளுண் மெலிவே” -தேவாரம். என்ற “அமிர்த கவித்தொடை”யைப் பாடி விடந்தீர்த்தருளினார். உடனே வணிகன் உயிர் பெற்றெழுந்தான் எழுந்து சம்பந்தப் பெருமான் சரணமலரில் வீழ்ந்தான் அம்மடமங்கையும் வீழ்ந்தாள். இன்பக்கடலில் ஆழ்ந்தாள். அவ்விருவருக்கும் மணம் புரிவித்து இல்வாழ்வு செய்யும் நல்வாழ்வு தந்தருளினார். |