“புகலியில் வித்தகர்போலே அமிர்தகவித் தொடை பாட அடிமைதனக் கருள்வாயே” என்றதன் குறிப்பு, ஞானசம்பந்தர் பதினாறாயிரம் பதிகம் பாடி யருளினார். அதுபோல் பதினாறாயிரம் திருப்புகழ் பாட அருள் புரிவீர் என்பது, தேவாரம் அமிர்தகவியானாற்போல திருப்புகழும் அமிர்தகவியாயிற்று. “எம் அருணகிரிநாதன் ஓதும் பதினாராயிரந் திருப்புக ழுமுதமே” -வரகவி மார்க்க சகாய தேவர் சமரிலெதிர்த் தசுர்மாள:- சமரில் எதிர்த்த சுர் மால எனப் பதம் பிரிக்க. சூர் என்றது சுர் எனக் குறுகி நின்றது. சூர்-சூரபன்மன். “சூர்மா மடியத் தொடுவே லவனே” -அநுபூதி நமசிவாய:- பஞ்சாக்கர விளக்கம் இது தூல பஞ்சாக்கரம். இறுதியில் வந்த யகரம் தமிழில் நான்காம் வேற்றுமையாம். நம-நமஸ்காரம்; சிவய-சிவனுக்கு, எனப் பொருள்படும். ந- என்னும் எழுத்து மும்மலங்கலையும் தத்தம் தொழில்களில் ஏவிப் பாகம் வருவித்தற் பொருட்டு அவற்றோடு உடனாய் நின்று உயிரை மரைத்தலால் திரோத சக்தி என்றும் திரோதமலம் என்றும் கூறப்படும் சிவ சக்தியையும், மா- என்னும் எழுத்து உயிரைக் கட்டி நிற்கும் ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங்களையும், சி-என்னும் எழுத்து செம்பொருட் கடவுளையும், வ- என்னும் எழுத்து அம் முழுமுதற் கடவுளோடு நெருப்பிற் சூடுபோல் உடனாய் நிற்கும் திருவருளையும், ய- என்னும் எழுத்து உயிரையும் உணர்த்தும். உயிரைத் திரோத சக்தியால் மலத்தைக் கெடுத்து அருளைக் கெடுத்து சிவம் தன்னோடு அத்துவிதமாக்கிக் கொள்ளும் என்பது அம்மந்திரத்தின் திரண்ட கருத்து. இன்னும் இதன் விரிவை நல்லாசிரியரை யடுத்துக் கேட்டுத் தெளிந்து ஜபித்து உய்வுபெறுக. ரசதகிரி:- ரசதம்-வெள்ளி, ரசதகிரி-வெள்ளிமலை. |