பக்கம் எண் :


24 திருப்புகழ் விரிவுரை

 

துகைத்து விட்ட=அடக்கித் துவையல் செய்துவிட்ட, பெருமாளே=பெருமையிற் சிறந்தவரே! முகத்தை பிலுக்கி=முகத்தை நன்கு ஒழுங்கு செய்து, மெத்த மினுக்கி தொடைத்து=மிகவும் மினுக்கித் தொடைத்து, ரத்ன முலை கச்சு அவிழ்த்து அசைத்து= மணிமயமான தனத்தின் மீதுள்ள ரவிக்கையை அவிழ்த்து அசையச் செய்து, முசியாதே= சற்றும் இளைக்காமல், முழுக்க கழுப்பி=காலம் முழுவதும் போக்கியும், எத்தி= வஞ்சித்தும், மழுப்பி=தாமதப்படுத்தியும், பொருள் பரித்து=வந்தவர்களிடம் பணத்தைப் பறித்து, மொழிக்கு உட்படுத்து=அவர்களை இனிய மொழிகளால் மயக்கி வசமாக்கி, அழைத்து அமளிமீதே=அழைத்துக் கொண்டு போய் படுக்கையின் மேல், நகைத்து இட்டு அழுத்தி=புன்னகை புரிந்து தழுவி, முத்தம் அளித்து களித்து=முத்தந் தந்து மகிழ்ந்து, மெத்த நயத்தில் கழுத்து இறுக்கி அணைவார்பால்=மிகவும் நயமாகக் கழுத்தை இறுக்கி அணைத்திடும் பொது மாதர்களுக்கு, நடுக்கு உற்று=அஞ்சி நடுங்கி, அவர்க்கு மெத்த மனத்தை பெருக்க வைத்து=மிகவும் அவர்கள்பால் மனதை ஆசை பெருகுமாறு வைத்து, நயத்து தியக்கி நித்தம் அழிவேனோ=அம்மகளிரிடம் நயந்து வேண்டியும் அதனால் கலக்க மடைந்தும் தினந்தோறும் அடியேன் அழியக் கடவேனோ?

பொழிப்புரை

செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க திமித்தித் திமித்தி தித்தி என்ற ஒலியுடன் திருநடம் புரிகின்றவரும், உலகத்தின் ஒப்பற்றவரும் ஆகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே! ஒருமைப்பட்ட உள்ளத்துடன் துதி செய்கின்ற அன்பர்களின் திருக்கூட்டத்துக்கு இனிய திருவருட் பேற்றினை அருள் புரிகின்றவரே! உறுதியுடன் மேற்சென்று அசைத்து பாரத்தைப் பொறுத்து இராவணன் அகந்தை மிகுந்து பேர்த்து எடுத்த திருக்கயிலாய மலையின் மீது எழுந்தருளியிருந்து, அதனை அடுத்துள்ள கிரவுஞ்ச மலையை இடித்துப் பொடி செய்து, அடக்கித் துவையலாக்கிவிட்ட பெருமிதம் உடையவரே! முகத்தை நன்கு கழுவி மினுக்கித் துடைத்து அலங்கரித்து இரத்ன மணி மயமான தனத்தின் ரவிக்கையை அவிழ்த்து அசைத்து, சற்றும் இளைக்காமல், காலம் முழுவதும் போக்கியும், வஞ்சித்தும், தாமதப்படுத்தியும், பொருள் பறித்து இனிய மொழிகளால் வந்தவர்களை வசமாக்கி அழைத்துக்கொண்டு போய்ப் படுக்கையின் மீது, புன்னகை செய்து தழுவி, முத்தமிட்டு மகிழ்ந்து, மிகவும் நயமாகக் கழுத்தை அழுந்த அணைந்துகொள்ளும் விலைமாதர்களுக்கு அஞ்சி நடுங்கியும், அவர்கள்பால் மனதை வைத்து ஆசை பெருகி, அவர்களை நயந்து வேண்டியும், அவர்களால் கலக்கமுற்றும் தினந்தோறும் அடியேன் அழியலாமோ?