பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 25

 

விரிவுரை

இத்திருப்புகழில் முன்னுள்ள நான்கு அடிகளிலும் இருமனப் பெண்டிரின் மாயச் செயல்களைக் கூறி அம் மயக்க மறவேண்டும் என்று, இறைவன்பால் அடிகளார் வேண்டுகின்றனர்.

ஆடும் செகத்துக் கொருத்தர்:-

கண்ணாடியில் காணும் நிழல் அசையும் பொருட்டுத் தான் அசைவது போல், அகில உலகங்களும் ஆடுதல் பொருட்டு இறைவன் இடையறாது ஆடுகின்றார். அனவரத ஆனந்தத் தாண்டவம் எனப்படும். சிவலிங்கம் அகர உகரமாகும்.

“எட்டிரண்டும் இதுவாம் இலிங்கமென
   எட்டிரண்டும் வெளியா மொழிந்த குரு               முருகோனே”
                                         -(கட்டிமுண்ட) திருப்புகழ்.

இந்த சிவலிங்கத்தினின்றும் வெளிப்பட்ட ஐந்தெழுத்தே நடராஜ உருவம்.

எட்டு மிரண்டு முருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக்கேள்-சிட்டன்
சிவாயநம வென்னும் திருவெழுத்தஞ் சாலே
அவாயமற நின்றாடு வான்                     -உண்மை விளக்கம்

புளியைக் கண்டவர்க்கு நாவில் நீர் ஊறுமாப்போல், அம்பலவாணருடைய அருட்கூத்தைக் கண்டார்க்குக் கண்ணீர் பெருகும்; ஆணவ இருள் விலகும். ஆனந்த அமுதம் ஊற்றெடுக்கும்.

புளிக்கண் டவர்க்குப் புனலாறு மாபோல்
களிக்குந் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம்
துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
ஒளிக்குள் ஆனந்தத் தமுதூறும் உள்ளத்தே.           -திருமந்திரம்

அப்பரமபதியே அகில உலகங்கட்கும் தலைவர். பசுபதி; அவரே ஒருவர்; ஒப்பற்றவர்.

“உலகுயிர்க்கெல்லாம் பசுபதி ஒரு முதல்” என்று அரிச்சந்திர காவியம் பேசுகின்றது.

நினைத்துத் துதித்த பத்தர்:-

இறைவனை அநேகர் நினைக்கின்றார்கள். ஆனால் பொன்னையும் பொருளையும் நிலபுலங்களையும் பிறவற்றையும் நினைத்த வண்ணம் இறைவனையும் நினைக்கின்றார்கள். வேறு