எந்த நினைப்பும் இன்றி ஒருமைப்பட்ட உள்ளத்துடன் நினைக்க வேண்டும். அவ்வண்ணம் நினைத்து, அத் தியானத்தில் ஊற்றெடுத்த பேரின்ப வெள்ளம் பொங்கி வழியும்போது துதிகள் வெளிப்படும். பத்த ஜெனத்துக் கினித்த சித்தியருள்வோனே:- அடியார் குழாங்கட்கு இனிமையான இஷ்ட சித்திகள் அனைத்தும் முருகவேள் பன்னிரு கரங்களாலும் வழங்குவார். மிசைத்துத் திடத்தொடுற்று அசைத்துப் பொறுத்தரக்கன் மிகுத்துப் பெயர்த்தெடுத்த கயிலாய:- இராவணன் சாபம் பெற்றது பிரமதேவருடைய புதல்வர் புலத்தியர். புலத்தியருடைய புதல்வர் விச்சிரவசு.விச்சிரவசு என்பவருடைய மகன் குபேரன். விச்சிரவசு என்ற அந்தண முனிவரிடம் கேகசி என்ற அரக்க மகள் நெடுநாள் பணிவிடை புரிந்தாள். மாலி, சுமாலி, மாலியவான் என்ற மூன்று அசுர வேந்தர்களில் நடுப்பிறந்த சுமாலியின் மகள் கேகசி. இவள் புரிந்த பணிவிடையை மெச்சி என்ன வரம் வேண்டும் என்றார் விச்சிரவசு. அவள் புத்திர வரம் கேட்டாள். அந்த அரக்கியின்பால் விச்சிரவசு என்ற முனிவருக்குப் பிறந்தவர்கள் தசக்கிரீவன், கும்பகர்ணன், வீடணன், சூர்ப்பணகை என்ற நால்வரும். தசக்கிரீவன் தன் தமையனாகிய குபேரனுடன் போர் புரிந்து அவனுடைய புஷ்பக விமானத்தைக் கவர்ந்து கொண்டான் அவ்விமானம் ஊர்ந்து விண்மிசை சென்றான். திருக்கயிலாய மலைக்குமேல் விமானம் செல்லாமல் தடைப்பட்டது. “செல்” “செல்” என்று செலுத்தினான் திருக்கயிலாயமலைத் திருவாயிலைப் பொற்பிரம்பு தாங்கிக் காவல் புரிகின்ற திருநந்திதேவர் நகைத்து, “தசக்கிரீவா! இது சிவமூர்த்தி எழுந்தருளியுள்ள திருக்கயிலாயமலை. இது தேவர்களும் மூவர்களும் கதிர் மதியாதிகோள்களும் விண்மீன்களும் வலம் வரத்தக்க பெருமையுடையது; நீ வலமாகப் போ” என்று கூறி அருளினார். |