தசக்கிரீவன் அகந்தையால் சினந்து, “குரங்குபோல் முகம் உடைய நீ எனக்குப் புத்தி புகட்டுகின்றனையா?” என்றான். திருநந்திதேவர் சிறிது சீற்றங்கொண்டு, “மூடனே என்னைக் குரங்குபோல் என்று பழித்தபடியால் உனது நாடு நகரங்களும் தானைகளும் குரங்கினால் அழியக் கடவது” என்று சாபமிட்டனர். இதைக் கேட்டுந் திருந்தாத அக்கொடிய அரக்கன் விமானத்தை விட்டு இறங்கி, வெள்ளி மலையைப் பேர்த்து அசைத்தான். உமாதேவியார் “பெருமானே! மலையசைகின்றதே” என்று வினவியருளினார். சிவமூர்த்தி “தேவி! ஒரு மூட அரக்கன் நம் மலையைப் பேர்த்து அசைக்கின்றான்” என்று கூறி, ஊன்றிய இடச் சேவடியின் பெருவிரல் நகத்தால் ஊன்றி யருளினார். அவன் அப்படியே மலையின் கீழ் அகப்பட்டுக்கொண்டு என்பு முறிந்து உடல் நெரிந்து “ஓ” என்று கதறி அழுதான் “அஞ்சுமேயுடன் கானகம் ஒன்றுமே அரக்கனைப் பொரும் கானகம் ஒன்றுமே” (கானகம்=கால்நகம்) சிவமூர்த்தி நகம் ஒன்றால் அடர்க்க அகப்பட்டு அழுத இராவணனை, ஸ்ரீராமர் எழுபது வெள்ளம் வானரங்கள் புடைசூழப் பத்து நாள் போரிட்டு அழித்தார். ஓ என்று கதறியழுததனால் இராவணன் என்ற பேர் உண்டாயிற்று. கருத்துரை கயிலைமலை மேவு கந்தவேளே! மாதர் மயக்கற அருள் புரிவாய். திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோடி சிவவழி யுடனுற் றேக பரமீதே சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோல திரிபுர மெரியத் தீயி னகைமேவி இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகி யிருள்கதி ரிலிபொற் பூமி தவசூடே இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ ரிளையவ னெனவித் தார மருள்வாயே |