பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 3

 

முக்கனிகள், பால், செங்கருப்பஞ்சாறு, இளநீர் முதலியவைகளின் இனிமையைத் தனது இணையற்ற உயிரினும் உணர்விலும் இனிக்கும் பெருஞ்சுவையால் பழிக்கும் சிவத்தின் திருவருட்பெருக்கு உண்டாகவும், நன்மையும் தீமையும் ஆகிய வினைகள் முழுவதும் துகள் பட்டொழியவும், சீவன் சிவ வடிவு என்பதைத் தெளிந்தும், அகங்காரத்தை ஒழித்து பரவெளியில் அருள்நாதத்தோடு கூடிய பரஞ்சோதியில் சிவஞானம் பெருகிவரவும் உவட்டாத இன்பத்துடன் கூடிய முத்தியில் என்றும் நிலைத்து மகிழவும் தேவரீருடைய திருவடியைத் தந்தருள்வீர்.

விரிவுரை

தேனுந்து முக்கனிகள்...........சீரும் பழித்த சிவம்:-

சிவத்தைச் சிந்தித்து திருவருள் மயமாகி நிற்கும்போது அளவிட்டுச் சொல்லவும் எழுதவும் இத்துணைத்தென்று நினைக்கவும் முடியாத ஓர் இன்ப உணர்ச்சி உண்டாகும். அவ்வநுபவ இன்பத்தைப் பிறரறியாக் கூறற்பாற்றோ?

“அவ்வா றறிவா ரறிகின்றதலால்
 எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே”              -அநுபூதி

இன்ப நாயகனாம் இறைவனை மெல்ல மெல்ல நினைக்கத் தொடங்கும்போது இணையற்ற ஒரு தனிப் பரமானந்தம் அரும்பும். அவ்வினிமையைச் சுவைத்தறிந்தவர்க்குக் கரும்பு துவர்க்கும்; தேன் புளிக்கும்; பிற கசக்கும். தொடக்க இன்பமே இங்ஙனமாயின் அதன் முதிர்ச்சியில் உண்டாகும் இனிமையின் திறத்தை அளவிடற்பாலர் யாவர்? எழுதுவது எங்ஙனம்?

கரும்பு என்பது சந்தத்தை ஒட்டி வலித்தல் விகாரம் பெற்று கருப்பு என வந்தது.

இளநீரை உலையாக வைத்து அதில் நல்ல ஆவின் பாலையும் முப்பழச் சாற்றையும் பிழிந்துவிட்டு கருப்பஞ் சாற்றையுங்கூட்டி பதத்தில் இறக்கி வடித்தெடுத்த கொம்புத் தேனையும் விட்டுக் குழைத்துச் செய்த ஒரு மது வர்க்கம் மிகவும் இனிமையாக இருக்கும். ஆனால், நுனி நாவில் மட்டுந்தான் இனிக்கும். அதை எடுத்துக் கண்ணிலும் காதிலும் மூக்கிலும் விட்டால் இனிக்குமா? இன்பத்தை யளிக்குமா? துன்பத்தையே தரும். அந்த மதுவர்க்கத்தை முதுகில் மார்பில் வைத்தால் இனிக்குமா? இவ்வளவு பாடுபட்டு முயன்று செய்த அது நாவின் நுனியில் மட்டுமே இனிக்கும்.