பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 31

 

பாவை மண மென மருவி :-

சிறுமியர்கள் சிறு பிராயத்தில் பொம்மைக் கல்யாணம் புரிந்து மகிழ்வர். அதுபோல் இறைவனை யடைகின்ற முழு பக்குவம் இல்லையெனினும், பாவைக்குத் திருமணம் செய்து அச்சிறுமியர் மகிழ்வது போல் சிறியேன் இறைவனுடன் ஒன்றி இன்புறுவேன்.

திரிபுரமொயித் தீயி னகைமேவி :-

திரிபுரம் என்பது மும்மலத்தைக் குறிக்கும்.

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறிவாரே.                      -திருமந்திரம்

ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களும் வெந்து பொடியாகுமாறு ஞானமாகிய தீப்பொறி சிந்தச் சிரித்தல்.

இருவினை பொரிய:-

     பிறவிக்குக் காரணம் வினை. வினை நல்வினை, தீவினை எனப்படும். உணவு விளைகின்ற இடம் வயல். வயல், நன்செய், புன்செய் என்ற இரு பிரிவினையால்தான் பிறவித் தொடர் விடாது சூழ்ந்து வருகின்றது.

“விதிகணும் உடம்பை விடா வினையேன்
   கதிகாண மலர்க்ழல் என்றருள்வாய்”
                                        -அநுபூதி

நல்வினை-பொன்விலங்கு தீவினை-இரும்பு விலங்கு. இரண்டும் விலங்குதானே. ஆதலால் ஞானத் தீயினால் இந்த இரு வினைகளும் எரிந்து, பொரிந்து, கரிந்து சாம்பராகுமாறு செய்துவிட்டால் பிறப்பு நீங்கிவிடும.

“தாவரும் இருவினைச் செற்றுத் தள்ளரும்
   மூவகைப் பகையரண் கடந்து முத்தியில்
   போவது புரிபவர்”                                              -கம்பர்.

“இருவினைமு மலமமுற இறவியொடு பிறவியற
                     ஏகபோகமாய் நீயுநானுமாய்
   இறுகும் வகை பரமசுகம் அதனையருள் இடைமருதில்
           ஏகநாயகா”                    -(அறுகுநுனி) திருப்புகழ்.