பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 33

 

இளமையுடன் இருப்பதைக் கண்ட தேவர்கள், “இவன் என்றும் இளையோனாய்” என்று புகழ்வார்கள்.

வித்தாரம் அருள்வாயே:-

விசித்திரமான பேரின்பப் பெருவாழ்வு. அருணகிரிநாதர் இத் திருப்புகழில் இணையற்ற சிவாத்துவிதச் செம்பொருளை வேண்டுகின்றார்.

பரிபுர கழலெட்டாசை செவிடுகள் பட:-

நடராஜப் பெருமான் திருநடனம் புரிகின்றபோது, அப்பெருமானுடைய திருவடியில் விளங்கும் சிலம்பும் வீரக்கழலும் கிண் என்று ஒலிக்கின்றபோது, எண் திசைகளும் செவிடு படுகின்றன. ஆசை-திசை.

"அணங்கார் பாகனை ஆசைதோறும்”           -கம்பர்

முத்தேவர் பழமறை பணிய:-

இறைவனுடைய நடன தரிசனத்தைக் கண்டு மூவர்களும், முதுமறைகளும், புகழ்ந்து போற்றுகின்றன.

சூல மழு மானும் பரிவொடு சுழல:-

இறைவன் சுழன்று ஆடுவதனால் அவருடைய திருக்கரங்களில் உள்ள சூலமும், மழுவும், மானும் அசைந்து சுழன்று ஆடுகின்றன.

சேடன் முடி நெறு நெறன:-

இறைவன் நடனஞ் செய்யும்போது, அதனைத் தாங்கும் ஆற்றல் பெறாத ஆதிசேடனுடைய பணாமகுடங்கள் முறிவு பெறுகின்றன.

கோவு பரியினை மலர்விட்டாடி:-

கோ-பசு. இறைவன் பசுவையும் வாகனமாகக் கொள்கின்றார்.

‘பசுவேறும் எங்கள் பரமன்’                              -சம்பந்தர்.

அடியோர்கள் அரஹர வுருகிச் சேசெயென:-

சிவபெருமான் திருநடனஞ் செய்வதைகத் தரிசித்த அமரர்கள் ஆனந்த மேலிட்டு ஹர ஹர என்றும் ஜெய ஜெய என்றும் ஒலித்து இறைஞ்சி இன்புறுவர்.