பக்கம் எண் :


342 திருப்புகழ் விரிவுரை

 

எண்ணில்லாதன; (இத்துணை கோடி பிறவிகள் வந்து கொண்டே இருப்பதற்குக் காரணம்) மனத்தில் எண்ணுகின்ற எண்ணங்கள் எண்ணில்லாதன; வஞ்சங்களும் எண்ணில்லாதன; பிறர் குடிகளைக் கெடுத்தனவும் எண்ணில்லாதன; விலங்குகளைப் போல் மன்னுயிரைக் கொன்றதும் தின்றதும் எண்ணில்லாதன; பிரமதேவன் கையொழியாமல் விதி விலக்குகளை எழுதியதும் எண்ணில்லாதன; ஆதலால் கொசுவுக்கு நிகரானவனும் பிடிவாத முடையவனும், அறிவற்ற குலத்தினனும், அறிவழிந்த வஞ்சகனுமாகிய அடியேன் தேவரீருடைய திருவடிக் கமலத்தை நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுமாறு இனிமேலாவது திருவருள் புரிவீர்.

விரிவுரை

சினத்திலத்தினை:-

சின-சின்ன; னகரமெய் மரைதல் விகாரம். எள், தினை நொய்மணல் அளவுள்ள சிறிய உடம்புடன் கூடிய பிறப்புக்களை எடுத்தது எத்தனையோ? மேலும் கருவில் எள்ளளவு கூடி யழிந்ததும், தினையளவுகூடி யழிந்ததும், சிறுமணலளவு கூடி யழிந்தது எத்தனையோ-என்றும் பொருள் கொள்ளலாம்.

செமித்ததெத்தனை:-

சேமித்தல் என்பது செமித்தல் என்று குறுகல் விகாரம் பெற்றது. மிகுந்த பாவஞ் செய்த ஆன்மாக்களை இருட்புறத்துலகில் கற்பம் வரை இயமன் சேமித்து வைப்பான்.

செழித்தது எத்தனை:-

மனிதசஞ்சாரமற்ற மலைச்சுனைகளில் மீன் முதலிய பிறவிகளாகப் பிறந்து செழிப்புற்றது எத்தனையோ பிறவிகள்.

மனத்திலெத்தனை நினை:-

இவ்வாறு பலகோடி கற்பங்களாக பலகோடி இடங்களில் எல்லாவகைப் பிறவிகளையும் எடுத்து எடுத்துக் கறங்கெனச் சுற்றி ஆன்மா இடைவிடாது அலைவதற்குக் காரணம் மனதில் உண்டாகும் பலகோடி எண்ணங்களேயாம். ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒவ்வொரு பிறப்புண்டு. குபேரன் சிவபெருமானுடன் தென்னாட்டுத் திருத்தலங்களைத் தரிசித்து வருங்கால் காவிரிப்பூம் பட்டினத்தைக் கண்டு சிலநாள் தங்குதல் வேண்டும் என்று எண்ணியதால் பட்டினத்தாராகப் பிறந்தனன் என்பது சரித்திரம். மனத்தில் கவடும், வாக்கில் குடி கெடுப்பதும், காயத்தால் கொலை செய்வதுமாக திரிகாரணங்களாலும் தீமையே செய்கின்றமையால், பிரமதேவன் கரமொழியால் விதிவிலக்குகளை எழுதிக்கொண்டே இருக்கின்றனன். ஆதலால்